தமிழகம்

திமுக போன்ற மோசமான இயக்கம் ஆட்சிக்கு வரக்கூடாது- ராமதாஸ் விளாசல்

அரியலூர்

தி.மு.க. போன்ற மோசமான ஒரு இயக்கம் இந்த மண்ணில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அரியலூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் பாலு, குன்னம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

அதிமுக, பாமக கூட்டணி, ஒரு சிறந்த கூட்டணி. மக்கள் மேம்பாட்டுக்காக நல்ல பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் கூட்டணி. அதிமுக தனது தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும், மாதம்தோறும் 1500 ரூபாய் பணம், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசம் என்பது உட்பட ஏராளமான நல்ல பல திட்டங்களை அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான இந்த கூட்டணி வெற்றிபெற்றால் இன்னும் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

நமது தேர்தல் வாக்குறுதிகளை காப்பியடித்து திமுக வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் உள்ளிட்டவை, மீண்டும் தலைதூக்கும். திமுக போன்ற மோசமான ஒரு இயக்கம் இந்த மண்ணில் ஆட்சிக்கு வரக்கூடாது. ‘

அரியலூர் மாவட்டத்தை பிரித்து, தனி மாவட்டமாக செயல்படுத்த, காடுவெட்டி குருவும் நானும் பல போராட்டங்களை நடத்தி வெற்றிபெற்றோம். அரசு தலைமை கொறடாவாக உள்ள தாமரை எஸ்.ராஜேந்திரன், நமது பல்வேறு கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் மத்தியில் எடுத்துச் சென்று, அதற்கான தீர்வுகளை பெற்றுத் தந்துள்ளார்.

அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும், போட்டியிடும் கழக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்களை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டியது, வாக்காளர்களாகிய உங்களது பொறுப்பு. தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு அமைய, நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டங்களில் பா.ம.க வேட்பாளர் ஜெயங்கொண்டம் பாலு, கழக வேட்பாளர்கள் அரியலூர் தாமரை எஸ்.ராஜேந்திரன், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன், பா.ம.க மாநில நிர்வாகிகள் திருமாவளவன், வைத்தி, சின்னதுரை, திருஞானம், அரியலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் தாமரைக்குளம் பிரேம்குமார், மற்றும் கழக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.