தற்போதைய செய்திகள்

ஓசூர் அருகே 20 ஏக்கரில் பிரம்மாண்ட காய்கறி சந்தை -முதலமைச்சர் உறுதி

சென்னை

விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டமாக ஓசூர் அருகே 20 ஏக்கரில் பிரம்மாண்டமான காய்கறி சந்தை
அமைத்து தரவிருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:-

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெற்றி பெற செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி வேளாண் பெருமக்கள் நிறைந்த பகுதி. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அம்மாவின் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இங்கே காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. இப்படி விளைகின்ற காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். அதற்காக அம்மாவின் அரசு காய் கறிகளை விற்க ஓசூர் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் குளிர்பதனக் கிடங்குடன் கூடிய பிரம்மாண்டமான காய்கறி சந்தை அமைத்து தரவிருக்கிறோம். இது விவசாயிகளுக்கான வரப்பிரசாதமான திட்டம்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மலர் உற்பத்தி அதிகம் இருக்கிறது. அங்குள்ள விவசாயிகள் எல்லாம் மலர்களை பெங்களூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

அதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சர்வதேச மலர் ஏலம் மையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி கொண்டிருக்கிறோம். இதனால் அந்த மலர் சாகுபடி செய்கின்ற விவசாயிகள் இந்த சர்வதேச மலர் ஏல மையத்திற்கு மலர்களை கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம்.

விவசாயப் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நீர் கிடைப்பதற்கு அலியாளம் அணைக்கட்டிலிருந்து 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு வலதுபுற கால்வாய் அமைத்து தென்பெண்ணை ஆற்றிலிருந்து உபரிநீரை சூளகிரி,தேன்கனிக்கோட்டை வட்டங்களிலுள்ள 12 ஏரிகளில் நீர் நிரப்பப்படும்.

அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வறட்சி, புயல், கனமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் ரூபாய் 12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவி குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தாய்மார்கள் 6 சவரனுக்கு குறைவாக நகைகளை அடமானம் வைத்து கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடிசெய்யப்படும்.

கழக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். மீண்டும் அம்மா அரசு அமைந்தவுடன் எல்லா அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கும் விலையில்லாமல் 6 சிலிண்டர்கள் ஒரு ஆண்டிற்கு வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும். கேபிள் டிவி இணைப்பு இனி கட்டணமில்லாமல் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் லைசென்ஸ் வழங்கப்படும். ஏழை மக்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அம்மாவின் அரசு உதவி செய்யும். இதுபோன்ற திட்டங்கள் அம்மாவின் அரசால் செயல்படுத்தப்படும். அனைத்து தரப்பு ஏழை, எளிய மக்களுக்கும் அரசே நிலத்தை வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

ஆதிதிராவிட மக்களுக்கு ஏற்கனவே கட்டித் தரப்பட்டுள்ள வீடுகளில் வசிக்க இயலாத அளவிற்கு பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அம்மாவுடைய ஆட்சி அமைந்தவுடன் இந்த எல்லா திட்டங்களையும் நிச்சயமாக நிறைவேற்றும். போயர் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கோரிக்கையை ஏற்று போயர் நல வாரியம் அமைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகள்

நிறைவேற்றப்படும்.

இது உங்கள் அரசு, மக்களின் அரசு. ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வரும் அம்மாவின் அரசு மீண்டும் தொடர உங்கள் வெற்றி வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெற்றி பெறச்
செய்ய வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.