தமிழகம்

ரூ.9.66 கோடியில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை

ரூ.9.66 கோடியில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாரணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் 2020-2021-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது முதலமைச்சர், பல்வேறு தரப்பில் இருந்து வரும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் வகையில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் துவக்கப்படும் என்று அறிவித்தார்.

இதன்படி இதற்கான முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வகையில், 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் துவக்கி செயல்படுத்த கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அனுமதி வழங்கி பார்வை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அம்மா நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்படும் நாள் மற்றும் செயல்படும் இடம் ஆகியவற்றிற்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெறவேண்டும்.மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயிக்கும் இடங்களில், ஒவ்வொரு அம்மா நகரும் நியாய விலைக்கடையும் இயங்கும். அவை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தினங்களில், செயல்பட வேண்டும். நகரும் நியாயவிலைக் கடை செயல்படவேண்டிய நாள் அரசு விடுமுறை தினமாக இருக்கும்பட்சத்தில், அடுத்த வேலை நாளில், மேற்படி நகரும் நியாயவிலைக் கடை செயல்பட வேண்டும்.

விநியோகம் செய்யும் இடம் அரசு கட்டிடம், உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டிடங்கள் அல்லது பொதுமக்கள் அதிகமாக கூடும் ஊர் பொது இடமாக இருக்கலாம். அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடர்பான அனைத்து விவரங்களும் மாவட்ட ஆட்சித் தலைவரால் நன்கு விளம்பரம் செய்யப்படவேண்டும். அம்மா நகரும் நியாயவிலைக் கடை இயங்கும் இடத்தில் பெயர் பலகை ஒன்றினை, அனைவரும் அறியும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நாள், குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் பகுதி, கடை செயல்படும் நேரம் உள்ளிட்ட விபரங்களுடன் வைக்கப்பட வேண்டும்.

அம்மா நகரும் நியாயவிலைக் கடை மூலம் பொருட்களைக் குறிப்பிட்ட நாளில் பெற்றுக்கொள்ள முடியாத குடும்ப அட்டைதாரர்கள் எவரேனும் இருப்பின், அவர்களை பின் நாட்களில் தாய்க்கடையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கலாம்.

அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை செயல்படுத்த தேவையான வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ள ஏதுவாக, வாடகை நிர்ணயம் செய்வது அவசியமாகிறது. எனவே இதற்கென மாவட்ட ஆட்சித்தலைவர் (குழு தலைவர்), மண்டல இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, மேலாண்மை இயக்குநர், முதன்மைச் சங்கம், ஆகியோரை கொண்டு குழு அமைக்கப்படுகிறது.இந்த குழு வாகனத்திற்கான வாடகையினையும், கட்டுப்பாட்டுப் பொருட்களை ஏற்றி இறக்க மூட்டை ஒன்றிற்கான கூலியையும் சந்தை நிலவரத்திற்கு உட்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யலாம்.

அதனடிப்படையில், அந்தந்த மாவட்ட கூட்டுறவு நிறுவனங்கள் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளுக்கு வாகன வாடகை மற்றும் ஒரு மூட்டைக்கான ஏற்றுக்கூலி மற்றும் இறக்குக்கூலியினையும் அனுமதிக்கலாம். கட்டுப்பாட்டுப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் சேதமின்றி வாகனத்தில் கொண்டு சென்று விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.மின்னணு எடைத் தராசின் மின்கலம் மற்றும் விற்பனை முனையக் கருவி ஆகியவை போதுமான அளவு மின்னேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.நகரும் நியாயவிலைக் கடையில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டுப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்களுக்கு தகுந்த இடப்பெயர்வு காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடைகளில், மாற்றுத் திறனாளிகள் இருப்பின் அவர்களை வேறொரு நியாயவிலைக் கடைக்குஇடமாற்றம் செய்ய கேட்டுக் கொள்கிறேன். தரமான பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வழங்கப்படுவதை கள அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.