தற்போதைய செய்திகள்

விவசாயி மீண்டும் முதலமைச்சராக இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம்

மதுரை

விவசாயி மீண்டும் முதலமைச்சராக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று சோலைப்பட்டி, அம்மாபட்டி, கீழக்காடனேரி, குமாரபுரம், சாலிச்சந்தை, சொக்கம்பட்டி, பொன்னையாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து இரட்டை இலைை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். சோலைப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் களத்தில் அறுவடை ெசய்த துவரை கதிர்களை அடித்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அங்கு சென்று விவசாயிகளிடம் சேர்ந்து கதிர் அடித்தார். இதனை பார்த்த மக்கள் நெகழ்ச்சி அடைந்தனர்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள். அதனால் தான் கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி என்று திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடியிருப்பார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மா விவசாய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தந்ததோடு மட்டுமல்லாமல் ரூ.5000 கோடிக்கு மேல் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்தார். குறிப்பாக முல்லை பெரியாறு, காவேரி பிரச்சினையில் விவசாய மக்களின் உரிமைகளை போராடி பெற்றார்.

தற்போதுள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உங்களை போன்ற விவசாயி. உங்களின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்தவர். திருவாரூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் சென்ற போது வயலில் இறங்கி நாற்று நட்டார். முதலமைச்சர் சேற்றில் கால் வைத்து அந்த நல்ல நேரம். இன்றைக்கு தமிழகத்தில் விளைச்சல் இருமடங்காக அதிகரித்துள்ளது.

தற்போது அம்மாவின் வழியில் நடக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 12,110 கோடி விவசாய கடனை ரத்து செய்துள்ளார். 5 ஆண்டுகளில் ரூ.17,000 கோடிக்கு மேல் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்த ஒரே அரசு அம்மா அரசு. அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகை அடகு வைத்து இருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இப்படி பல்வேறு திட்டங்களால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. ஆகவே உங்களை போன்ற விவசாயி முதலமைச்சர் எடப்பாடியார் தான் இந்த நாட்டை மீண்டும் ஆள வேண்டும். ஆகவே இந்த தொகுதியில் உங்கள் சேவகனாக நான் நிற்ககிறேன் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளித்து என்னை அமோக வெற்றி பெற செய்யுமாறு உங்கள் பாதம் பணிந்து கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.