தூத்துக்குடி

சவுதிஅரேபியாவில் சிக்கிதவித்த இளைஞர் மீட்பு – முதலமைச்சருக்கு மீனவ கிராம மக்கள் நன்றி

தூத்துக்குடி

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்த தீவிர முயற்சியால் சவுதிஅரேபியாவில் சிக்கிதவித்த மீனவ இளைஞர் கீழவைப்பார் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டார். இந்த நடவடிக்கைக்காக முதலமைச்சருக்கும், அம்மாவின் அரசுக்கும் கீழவைப்பார் மீனவ கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கீழ வைப்பார் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜென்சன் மகன் ஜெனிங்ஸ்டன் (வயது 27) என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் மீன்பிடித்தொழில் சரிவர இல்லாத காரணத்தினால் தனது தாய் தந்தையரையும் தன் மனைவி மற்றும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டி வேலை தேடி சவுதி அரேபியா நாட்டிற்கு வேலை தேடி சென்றார்.

அங்கும் அவருக்கு சரிவர வேலை கிடைக்காமல் கடந்த 7 மாதமாக இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் பசியும் பட்டினியால் வாடிய நிலையில் தவித்து வந்தார். தனது பரிதாப நிலையை குளத்தூர் கூட்டுறவு வங்கி தலைவராகவுள்ள கழகத்தை சேர்ந்த பிரகாஷி ஜெனிதா, கீழ வைப்பார் கிளை கழக செயலாளர் சந்தியா ஆகியோருக்கு தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவர்கள் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பனிடம் சவுதி அரேபியாவில் சிக்கி தவித்து வரும் கீழவைப்பார் மீனவ இளைஞரின் பரிதாப நிலையை எடுத்துக்கூறி மீனவ இளைஞரை இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வரவேண்டி கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக இதுபற்றி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவிடம் தன், தொகுதியை சேர்ந்த மீனவ இளைஞர் ஜெனிங்ஸ்டன் சவுதி அரேபிய நாட்டில் சிக்கித் தவிக்கும் பரிதாப நிலையை எடுத்துக்கூறி மேற்படி மீனவ இளைஞரை மீட்டுத்தர எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

அதன்படி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேரில் சந்தித்து கீழவைப்பார் மீனவ இளைஞரை இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டுவர உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தீவிர நடவடிக்கை எடுத்தார்.

அதன் காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து ஜெனிங்ஸ்டன் மீட்கப்பட்டு 6.8.2020 அன்று சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டார். இதற்காக புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை சிறப்பாக வழிநடத்தி வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, போ.சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு கீழவைப்பார் கிராம மீனவ மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.