தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் தி.மு.க.வுக்கு மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள்-அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்

மதுரை

ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் திமுகவுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மேற்கு தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் கழக வேட்பாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கரிசல்குளம், கூடல்நகர், கூடல்புதூர், விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளிலும் தங்குதடையின்றி தண்ணீர் கிடைக்க ரூ.1,295 கோடி மதிப்பில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளனர். இதன் மூலம் மதுரைக்கு 60 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வராது.

திமுக ஆட்சிக்காலத்தில் மதுரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தற்போது ஓட்டுக்காக உங்களை எதிர்க்கட்சியினர் பார்க்க வருவார்கள். இன்றைக்கு ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் நிறைவு பெற்றவுடன் மதுரை எழில்மிகு நகராக மாறும்.

ஸ்டாலின் பல்வேறு பொய் பிரச்சாரங்களை மக்களிடம் பரப்பி வருகிறார். திமுகவிற்கு பொய் ஒன்று தான் மூலதனம். ஆகவே ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் ஒருபோதும் திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்த தேர்தலோடு திமுகவுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

பிரச்சாரத்தின்போது மாவட்ட கழக துணை செயலாளர் ஜெ.ராஜா, மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, முன்னாள் துணை மேயர் திரவியம் உள்பட பலர் உடன் சென்றனர்.