தற்போதைய செய்திகள்

பழவேற்காடு ஏரியில் இறங்க பயந்த அமைச்சர்: தூக்கி சென்று கரை சேர்த்த மீனவர்கள்

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொள்ள வந்தபோது படகிலிருந்து இறங்கி தண்ணீரில் இறங்க பயந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர் ஒருவர் தலைமையில் மற்ற மீனவர்கள் தூக்கி சென்று கரை சேர்த்த சம்பவம் அங்கிருந்தவர்கள் இடையே நகைப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உப்பங்கழி ஏரியும். கடலும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதி உள்ளது. இங்கு மணல் அரிப்பு ஏற்பட்டு நுழைவு வாயில் அடைபட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் பொழுது படகுகள் கரை தட்டி பழுதாகி விடுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு ஆய்வு மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோருடன் படகில் சென்றார். அப்போது ஏழு பேர் செல்லக்கூடிய படகில் அமைச்சருடன் ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

அப்போது பாரம் தாங்காமல் படகு ஒரே புறமாக சாயத்தொடங்கியது. இதனால் அதில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர் இதனையடுத்து அமைச்சர் பயணித்த படகில் இருந்த ஒரு சிலர் வேறொரு படகில் ஏற்றப்பட்டனர். அதன்பின் முகத்துவாரம் பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய அமைச்சர் படகிலிருந்து இறங்கி உப்பங்கழி நீரில் கால் வைத்து இயங்க பயந்தார். அங்கிருந்த மீனவர் ஒருவர் தலைமையில் மற்ற மீனவர்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை படகிலிருந்து இறக்கி தூக்கி சென்று கரை சேர்த்தனர்.

இந்நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது. ஏரி தண்ணீரில் இறங்க பயந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மழை வெள்ளம் வந்தால் பாதிக்கப்பட்ட பகுதியை எப்படி சென்று பார்வையிடுவார் என்று அங்கிருந்தவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டு சிரித்து கொண்டிருந்தனர்.