தற்போதைய செய்திகள்

மக்களுக்கு கொடுப்பதை கெடுக்கும் தி.மு.க வுக்கு முடிவு கட்டுவோம் – ஜி.கே.வாசன் அறைகூவல்

தேனி

மக்களுக்கு கொடுப்பதை கெடுக்கும் தி.மு.க வுக்கு முடிவு கட்டுவோம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறைகூவல் விடுத்துள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கழக வேட்பாளரும், கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:-

கட்சி பாகுபாடின்றி அனைவரையும் மதிப்பவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். போடி சட்டப்பேரவை தொகுதி சிறந்த பெயர் பெற்ற தொகுதி. வேளாண்மைத் துறையில் சிறப்பு பெற்ற தொகுதி. போடி தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, கால்நடை கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி போன்றவை கொண்டுவரப்பட்டு கல்வியில் முன்னேற்றமடைந்த மாவட்டமாக மாற்றியவர் துணை முதல்வர்.

போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் வளர்ச்சியடைந்த தொகுதியாக போடி தொகுதியை மாற்றியிருக்கிறார். அனைத்து துறையிலும் முன்னேற்ற மடைந்த தொகுதியாகவும் மாற்றியுள்ளார்.

போடி தொகுதியை மட்டுமல்ல தென் மாவட்டங்கள் வளர்ச்சியடைய எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர துணை புரிந்தவர் துணை முதல்வர். தமிழகம் முழுவதும் உளள அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற அடித்தளமிட்டு செயல்பட்டு வருபவர் துணை முதல்வர்.

போடி தொகுதியின் வளர்ச்சியை தமிழகத்தின் வளர்ச்சியாக எடுத்துக் கொள்ளவேண்டும். காரணம் மக்களது எண்ணங்களை செயல்படுத்தி வரும் துணை முதல்வரை தேர்வு செய்த தொகுதி.

தமிழகத்தில் கொரோனா காலங்களில் பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியதையும், பொங்கலுக்கு ரூபாய் 2500 வழங்கியதையும் திமுக எதிர்த்து வந்தது.

இவ்வாறு பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் சென்றடையும் எந்த ஒரு நலத்திட்டங்களையும் வழங்க விடாமல் எதிர்த்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் திமுக செயல்பட்டது இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

முதல்வரும், துணை முதல்வரும் கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.அம்மாவின் மறைவிற்குப் பிறகு அம்மாவின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

பட்டிதொட்டி வரை அனைத்து நலத்திட்டங்களையும் கொண்டு சேர்த்த முதல்வர் மற்றும் துணை முதல்வரை பற்றி பேசுவதற்கு திமுக தகுதியற்ற கட்சியாக இருக்கிறது. சட்டமன்றத்திற்கு செல்லாத கட்சியாகவும், வெளிநடப்புக்கு பெயர்போன கட்சியாகவும் திமுக இருக்கிறது

10 வருட கால தமிழகத்தின் வளர்ச்சியை தி.மு.க. முடக்கவும், தடுக்கவும் பார்க்கிறது. வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களை தகர்த்தெரிய வேண்டியது உங்கள் கடமையும் பொறுப்புமாகும். தொகுதிக்கு, நாட்டுக்கு நல்லது செய்பவர்களை அடுக்கடுக்காக பொய்களை கூறி மக்களை ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பவாத கூட்டணியாக தி.மு.க. கூட்டணி அமைந்துள்ளது.

மகளிருக்கான திட்டங்களிலே இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்தும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 38 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பவர் ப.ரவீந்திரநாத்.இந்த மக்கள் பணி தொடர துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு

தமிழகத்திலே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க நீங்கள் அனைவரும் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

பிரச்சாரத்தின் போது தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், த.மா.கா மாவட்ட தலைவர் மகேந்திரன் போடி நகர கழக செயலாளர் பழனிராஜ் மற்றும் பலர் உடன் சென்றனர்.