சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத ரூபாய் நோட்டு-துணை முதலமைச்சர் கடும் தாக்கு

தேனி

தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத ரூபாய் நோட்டு என்றும், கழக தேர்தல் அறிக்கை நல்ல ரூபாய் நோட்டும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓபன்னீர்செல்வம் தனது தொகுதியில் கடந்த 17-ந்தேதி பிரச்சாரத்தை தொடங்கினார்.

மூன்றாம் நாளாக நேற்று காலையில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியிலும், மாலையில் ஆதிபட்டி, வாழையாத்துபட்டி, பூதிப்புரம், கோடாங்கிபட்டி, வலையபட்டி, வாடிப்பட்டி, பத்ரகாளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தை காங்கிரசும் ஆட்சி செய்திருக்கிறது. தி.மு.க.வும் ஆட்சி செய்திருக்கிறது. ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் சிறப்பான ஆட்சியை கொடுத்தனர். சத்துணவு திட்டம் தந்தார் புரட்சித்தலைவர். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 16 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்து மக்களின் நிலை உணர்ந்து ஒவ்வொரு திட்டத்தையும் தொலைநோக்கு சிந்தனையோடு ஆராய்ந்து செயல்படுத்தினார்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு வழங்க வேண்டும் என்று எண்ணினார். அதன்படி இலவச அரிசி வழங்கினார். வேஷ்டி, சேலை வழங்கினார். குருவிக்கு கூட வீடு இருக்கிறது. வீடு இல்லாத ஏழைகளுக்கும் குடியிருக்க வீடு வழங்க 2023-க்குள் குடிசைகள் இல்லா தமிழகம் உருவாக 12 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை உருவாக்கினார்.

அதன் படி இதுவரை ஆறரை லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. தேனி மாவட்டத்தில் சுமார் 2600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2400 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்குவதே அம்மா அவர்களின் கனவு. அந்த கனவை நாங்கள் லட்சியத்துடன் நிறைவேற்றிக் காட்டுவோம்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் வீட்டின் கண்கள் என்று ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு நிதியை வங்கியில் முதலீடு செய்து 18 வயது நிறைவு பெற்றவுடன் வழங்கப்படுகிறது.

2011-ம் ஆண்டு தேர்தலின் போது தாலிக்கு தங்கம் 4 கிராம், மகப்பேறு நிதி 6 ஆயிரம் என்று இருந்ததை 2016-ம் தேர்தலின் போது தாலிக்கு தங்கம் 8 கிராமாகவும், மகப்பேறு நிதி ரூ.18 ஆயிரமாகவும் புரட்சித்தலைவி உயர்த்தினார். தற்போதைய அம்மா அரசை வழி நடத்தி கொண்டிருக்கின்ற எடப்பாடி கே.பழனிசாமி புரட்சித்தலைவி அம்மாவின் திட்டங்களை அடி பிறழாமல் நிறைவேற்றி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் இலவச மிக்சி, கிரைண்டர், பேன், வழங்குவது, மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் வழங்குவது உள்ளிட்ட சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

தந்தை பெரியாரின் ஆணுக்கு பெண் சமம் என்ற கொள்கைக்கேற்ப உழைக்கும் மகளிர்க்கு மானிய விலையிலான இரு சக்கர வாகனம் வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்கள் கழக அரசில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் இருந்தது. கழக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியது மட்டுமல்லாமல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக இன்று வரை வழங்கி வருகிறோம். திமுக கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையில் 2 ஏக்கர் நிலம் தருவோம் என்றனர்.

கொடுத்தார்களா இல்லை. இப்பவும் தேர்தல் அறிக்கை கொடுத்துள்ளனர். திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையானது செல்லாத ரூபாய் நோட்டு போன்றது. கழகம் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை நல்ல ரூபாய் நோட்டு போன்றது.

தமிழகத்தில் தொழில் முதலீட்டில் திமுக ஆட்சியில் 2006 – 2011 ம் ஆண்டில் 45000 கோடிக்கு தான் முதலீட்டை ஈர்த்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கழக அரசு சுமார் 6,85,000 கோடிக்கு முதலீட்டை ஈர்த்துள்ளது அதன் மூலம் சுமார் 19 லட்சம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

விவசாய உற்பத்தியை பொறுத்த வரையில் இந்திய நெல் உற்பத்தியில் 60 சதவிகிதத்தை தமிழகத்தில் உற்பத்தி செய்து நெல் உற்பத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது இன்று உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

மேலும் தமிழகம் பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக விளங்கி பல விருதுகளை பெற்றுள்ளது. இந்த தேர்தலிலும் குடும்பத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500, இலவச வாஷிங் மெஷின் வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியது போல் இப்பொழுதும் கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தற்போது கொடுத்துள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். 528 பேரூராட்சிகளை கொண்ட தமிழகத்தில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி உட்பட 10 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற செய்தீர்கள். நான் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்து உங்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றியிருக்கின்றேன்

கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன் என்ற மன நிறைவோடு மூன்றாவது முறையாக நமது தொகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கண்ட வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை தர வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.