தமிழகம்

கொரோனா விழிப்புணர்வுக்காக 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவை – முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 38,198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள், 10 நடமாடும் மையங்கள், என மொத்தம் 54 மையங்கள் உள்ளன.

இதுமட்டுமின்றி, வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட நபர்களின் இல்லங்களுக்கே சென்று கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்ய ஏதுவாக 50 ஆட்டோக்கள் மூலமாகவும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 8,21,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிக பரிசோதனைகள் மேற்கோண்ட பெருநகரங்களில், பெருநகர சென்னை மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது.

சென்னையில் மட்டும் நாள்தோறும் 12,000 முதல் 14,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 51 கோவிட் பாதுகாப்பு மையங்களில் 18,614 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட் பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல 289 வாகனங்கள் உள்ளன.

சென்னை மாநகர குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களோடு தொடர்பில் உள்ள தொற்றால் பாதிக்கப்படாதவர்களை தனிமைப்படுத்த ஏதுவாக 30,000 நபர்கள் தங்கக்கூடிய வகையில் மையங்கள் அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளன. தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 500 முதல் 550 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் வைரஸ் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 31,702 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 17,86,970 நபர்கள் பயனடைந்துள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளை கைப்பேசியின் மூலமாக கண்காணிக்கும் திட்டம் மாநகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை சமூக களப்பணித் திட்டம் (Chennai Community Intervention Program) என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்டலத்திற்கு 2 வாகனங்கள் வீதம், 15 மண்டலங்களுக்கு, மொத்தம் 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்வாகனங்களில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த முதலமைச்சரின் விழிப்புணர்வு உரை, சுகாதாரத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்கள் போன்றவை ஒளிபரப்பப்படும்.

நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான அபூர்வ வர்மா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.