காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு விநியோகம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தரமற்ற உணவுகளை தயாரித்து கொரோனா நோயாளிகளுக்கு விநியோகம் செய்து வந்தது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோயில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் மதிய நேரங்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு நாள்தோறும் 50-க்கும் மேற்பட்டோருக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களுக்கு உணவு கிடைக்க செய்ய வேண்டும் என்பதற்காக உணவு தயாரித்து வழங்குவதை இத்திட்டத்தில் இணைத்தது தமிழக இந்து சமய அறநிலையத்துறை.

இதையடுத்து காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக நாள்தோறும் 1500-க்கும் மேற்பட்ட உணவுப்பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு காஞ்சிபுரம் வாலாஜாபாத் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த உணவு தரமற்றதாக இருக்கிறது என்றும், இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் குழு அங்கு காலாவதியான பொருட்களை கொண்டு உணவு தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதற்கு முறையான விளக்கம் அளிக்க கோரி காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலருக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் இனிமேல் இதுபோன்ற காலாவதி பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொடுக்கப்படும் உணவு பொதுமக்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்த காஞ்சிபுரம் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.