கன்னியாகுமரி

ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்-கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் புகார்

கன்னியாகுமரி-

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த்தை சந்தித்து வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுக்கள் மூலம் கடன் வழங்கி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருப்பதால் மகளிர் குழுக்கள் மூலம் கடன் வாங்கிய மகளிர் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளார்கள்.

ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள் இதனை பொருட்படுத்தாமல் தங்களின் பணியாளர்கள் மூலம் கடன் வாங்கிய மகளிர் வீடுகளுக்கு நேரடியாக சென்று வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் பெண்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சகஜ நிலை திரும்பும் வரை கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் மகளிரிடம் கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தக்கூடாது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக ஏழை, எளிய மக்கள் வாழ்ந்த வீடுகள் இடிந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால் அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுக்கும் போது பாரபட்சமின்றி கணக்கெடுக்க வேண்டும். மேலும் வீடுகளுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் தற்போது பெய்த கனமழையிலும் தண்ணீர் நிரம்பவில்லை. இதனை கருத்தில் கொண்டு தண்ணீர் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுக்கும் போது தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.