தற்போதைய செய்திகள்

ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணிகள்- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், தாசப்பகவுண்டன்புதூர், புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிகளில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை தொடங்கி வைத்து 207 பயனாளிகளுக்கு ரூ.48.68 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியம், தாசப்பகவுண்டன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.36.46 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் கலை ஓவிய அறை, நூலக அறை மற்றும் குடிநீர் வசதியுடன் கூடிய கட்டிடம் கட்டும் பணிக்கும், புள்ளப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி ஏமூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், ஒரு மாணவர் கழிப்பறை, ஒரு மாணவியர் கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், தாசப்பகவுண்டன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு பயனாளிக்கு ரூ.1,91,487 மதிப்பீட்டில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 1.35 ஏக்டர் பரப்பில் கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியமும், ஒரு பயனாளிக்கு ரூ.80,000 மதிப்பீட்டில் துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் துளைக்கிணறு, தரைநிலைத் தொட்டி, மின் மோட்டார் அமைக்க மானியமும், ஒரு பயனாளிக்கு ரூ.500 மதிப்பீட்டில் நுண்ணூட்டமும், ஒரு பயனாளிக்கு ரூ.300 மதிப்பீட்டில் உயிர் உரமும், 8 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், ஒரு பயனாளிக்கு ஒருங்கிணைப்பு சான்றினையும், 7 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும்,

புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தை சார்ந்த 6 நபர்களும், அரக்கன்கோட்டை கிராமத்தைச் சார்ந்த 38 நபர்களும் என 44 நபர்களுக்கு ரூ.39,96,200 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், 120 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் தலா ரூ.25,000 மானியத்தில் 24 மகளிருக்கு ரூ.6,00,000 மதிப்பீட்டில் அம்மா இரு சக்கர வாகனங்களையும் என மொத்தம் 207 பயனாளிகளுக்கு ரூ.48.68 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து காசிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். மேலும் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் அமைக்கப்பட்ட நடமாடும் ஏ.டி.எம்.இயந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.