வேலூர்

ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை – பட்டப்பகலில் மர்ம கும்பல் வெறிச்செயல்

வேலூர்

அரக்கோணத்தில் ஜாமீனில் வந்த பிரபல ரவுடியை பட்டப்பகலில் மர்ம கும்பல் சரமாரி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம், ராஜா பாதர் தெருவை சேர்ந்த மணி என்பவரது மகன் கார்த்தி என்ற கார்த்திகேயன் (வயது36). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 4-ந்தேதி கார்த்தி என்ற கார்த்திகேயன் ஜாமீனில் வந்துள்ளார். பிறகு அவர் காவானூர் ரோடு போலாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று மாடியில் மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது ஒரு மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து மாடியில் இருந்த கார்த்தி என்ற கார்த்திகேயனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததுமே சட்டம்-ஒழுங்கு சீர்குலைய ஆரம்பித்து விட்டது என்று பொதுமக்கள் வெளிப்படையாகவே பேசிக் கொள்கின்றனர்.