தற்போதைய செய்திகள்

தொகுதிக்கு 2 கோயில்களில் ஏழைகளுக்கு அன்னதானம்-புதுச்சேரி முதலமைச்சருக்கு, ஓம்சக்தி சேகர் கோரிக்கை

புதுச்சேரி,

தொகுதிக்கு 2 கோயில்களில் அன்னதானம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சருக்கு மேற்கு மாநில கழக செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி மேற்கு மாநில கழக செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மணக்குள விநாயகர் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயில்களில் ஊரடங்கை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்படுவதாக அறிந்தேன். இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு தன்னார்வு அமைப்புகள் தாமாக முன் வந்து ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். ஆனால் அரசின் சார்பில் இரண்டு கோயில்களில் மட்டும் அன்னதானம் வழங்குவது போதுமானதாக இருக்காது.

எனவே இந்து சமய அறநிலையதுறைக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் இந்த அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் சட்டமன்ற தொகுதிக்கு 2 கோயில்கள் என்று தேர்ந்தெடுத்து ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும். இதனால் ஊரடங்கால் உணவின்றி பாதிக்கும் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் பயன் பெறுவர்.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக மக்களுக்கு உணவை எடப்பாடியார் தலைமையிலான கழக அரசு வழங்கியது. எனவே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஏழை எளிய மக்களின் பசி தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மேற்கு மாநில கழகம் சார்பில் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.