திருநெல்வேலி

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராதாபுரம் தொகுதியில் குளம் தூர்வாரும் பணி – இன்பதுரை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராதாபுரம் தொகுதியில் குளம் தூர்வாரும் பணியை இன்பதுரை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் கீழ் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாருவதால் மழை காலங்களில் வரும் தண்ணீரை வீணாக்காமல் குளங்களில் அதிக அளவில் சேமிக்க முடியும். கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளங்கள் தூர்வாரப்படும் திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி கலந்தபனை கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சன்னானேரி குளத்தை குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்க தமிழக அரசு ரூ. 40 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி சன்னாநேரி குளத்தில் நடைபெற உள்ள குடிமராமத்து பணியை ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐஎஸ். இன்பதுரை நேற்று தொடங்கி வைத்தார். இந்த குளத்தை தூர்வாருவதன் மூலம் பணகுடி, கலந்தபனை மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

குடிமராமத்து பணி தொடக்க நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, கழக நிர்வாகிகள் தங்கவேலு, கோபாலகிருஷ்ணன், வள்ளியூர் அருண் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கிருஷ்ணன், உதவி பொறியாளர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.