தர்மபுரி

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 145 பேர் பலி

தருமபுரி

நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 145 பேர் பலியாகி உள்ளனர

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்துடன் உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த பொதுமுடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் சில இடங்களில் குறைந்தாலும் தருமபுரி மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. இருப்பினும் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

நாள்தோறும் தொற்று பாதிப்பு 300 முதல் 400 பேர் வரை கண்டறியப்படுகிறது. இந்த எண்ணிக்கை கடந்த மே மாதம் முதல் தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து பேர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மாவட்ட மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 6-ந்தேதி ஒரே நாளில் 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதேபோல 365 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 20620 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17572 பேர் குணமடைந்துள்ளனர். 2903 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 145 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்து வரும் நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் தொற்று பாதிப்பு குறையாமல் உள்ளது. இந்த நிலையை தவிர்க்க மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அனைத்து கிராமங்களிலும் முகாம் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.