சிறப்பு செய்திகள்

சென்னையில் 30 லட்சம் வீடுகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் பணி – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை

சென்னை பெருநகரில் 10 லட்சம் இல்லங்களுக்கு மூன்று கட்டங்களாக 30 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் பணி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய 1 லட்சம் நபர்களுக்கு கைப்பேசி மூலம் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தல், நேப்பியர் பாலம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகள் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவை குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 12,000 களப்பணியாளர்கள் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் இல்லங்களில் வழங்கவுள்ள 10 லட்சம் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பருவமழை துவங்கியுள்ள நிலையில் 10 லட்சம் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் பொழிகின்ற மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க பயன்படும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளின் அவசியம் குறித்த 10 இலட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், ஆகியவற்றை வழங்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று களப் பணியாளர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய 1 லட்சம் நபர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் கைப்பேசி எண்கள் மூலமாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 இடங்களில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு மாறும் வண்ண மின்விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நேப்பியர் பாலம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகளை முதலமைச்சர் நேற்று துவக்கி வைத்தார்.

மேலும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் (TUFIDCO) 2019-2020-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால ஈவுத்தொகையான 7 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.