சிறப்பு செய்திகள்

அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டம் – தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை

கொரோனா தொற்றால் பாதித்து வீட்டிலிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க வகையில் அம்மா வீட்டுப் பராமரிப்பு” சேவை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

மருத்துவத் துறையில் காலியாக உள்ள 363 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமைச்செயலகத்தில் நேற்று வழங்கினார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மூலமாக “அம்மா Covid-19 வீட்டுப் பராமரிப்பு” சேவை திட்டத்தின் கீழ், சலுகை விலையான 2,500 ரூபாயில், 14 நாட்களுக்கான தொகுப்பாக, ஒரு Pulse Oximeter கருவி, ஒரு Digital Thermometer கருவி, 14 முகக்கவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்டுகள், 60 அமுக்ரா சூரணம் மாத்திரைகள், 14 வைட்டமின்-சி மாத்திரைகள், 14 Zinc மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள், கோவிட் கையேடு ஆகியவை அடங்கிய பெட்டகங்களை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அலுவலருக்கு பெட்டகத்தை வழங்கி துவக்கி வைத்தார்.

இதன்மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வருவதோடு, தீவிர நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கும் ஏதுவாக அமையும்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.