தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு பணி: அரசுக்கு கழகம் ஒத்துழைப்பு-முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

கொரோனா தடுப்பு பணியில் அரசுக்கு கழகம் ஒத்துழைப்பு கொடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகம் இருக்கிறது. எனவே அரசு மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் தூய்மைப் பணியாளர்களை அதிகம் நியமிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அரசின் வழிகாட்டுதல் படி உரிய பாதுகாப்புடன் பேக்கிங் செய்து கொடுக்காமல் அப்படியே கொண்டு செல்லும்படி கூறுகிறார்கள்.

இதனால் நோய் தொற்று அதிகம் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடலை பி.பி. கிட் போட்டு பாதுகாப்புடன் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் கிடைக்கும்.

இந்த கோரிக்கைகளை ஆய்வுக்கூட்டத்தின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் தெரிவித்தேன். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை மறுபரிசீலனை செய்து இந்த வாரம் முழுவதும் கடைகள் திறக்க வேண்டாம் என உத்தரவிட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் நலன் கருதி கொரோனா தடுப்பு பணியில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.