திருவள்ளூர்

159 மகளிருக்கு ரூ.1 கோடி கடன் உதவி – திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா வழங்கினார்

திருவள்ளூர்

மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 159 மகளிருக்கு ரூ.1 கோடியே 50 ஆயிரம் மதிப்பிலான கூட்டுறவு நேரடி கடன் உதவிகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா வழங்கினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பரம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடம்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சூரகாபுரம் சுதாகர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு பாப்பரம்பாக்கம், கொப்பூர் மற்றும் நயப்பாக்கம் கிராமங்களைச் சேர்ந்த 13 குழுக்களில் உள்ள 159 மகளிருக்கு ரூ. ஒரு கோடியே 50 ஆயிரம் கடன் உதவியை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், 2016 தேர்தலில் அம்மா அவர்கள் அளித்த வாக்குறுதிகளை அவர் மறைந்த பிறகும் அம்மா அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. சாதாரண ஏழை எளிய மக்களும் இல்லாமை இல்லாத நிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கில் அனைத்து திட்டங்களையும், அம்மா அரசு நிறைவேற்றி வருகிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து ரூ.25 கோடி மதிப்பீட்டில் 3 ஏக்கர் பரப்பளவில் 110 கே.வி.,மின்மாற்றி அமைக்கும் பணியை பார்வையிட்ட திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, இங்கு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படுவதால் பாப்பரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 கிராமங்களில் தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைக்கும் என்றும் விரைவில் அதன் பணிகளை நிறைவேற்றிட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சுதாகர், கூட்டுறவு சங்க தலைவர் பழனி, நகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சிற்றம் ஸ்ரீனிவாசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் ஞானகுமார் ஜோதி,வேல்முருகன், எழிலரசன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.