தற்போதைய செய்திகள்

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை,

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா என்றும், முதலமைச்சர் ஆரம்பித்த திட்டத்தை முதலமைச்சரே அவமானப்படுத்தியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு;-

கேள்வி : அண்ணா பிறந்தநாளான இன்று (நேற்று) காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். காமராஜர், எம்.ஜி.ஆருக்கு பிறகு நாங்கள் தான் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் என்று சொல்கிறார்களே.

பதில் : கம்பி கட்டும் வேலையை நன்றாக செய்கிறார்கள். இந்த ஆட்சியை பொறுத்தவரையில் உருப்படியான திட்டத்தை செயல்படுத்துவது கிடையாது. ஒரு திட்டத்தை கொண்டு வந்து பெயர் சூட்டு விழாவை மட்டும் பிரமாதமாக இருக்கும். ஏன் என்றால் முதல்வரின் பக்கத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு இருக்கிறார்.

நான் அமைச்சராக இருந்தபோது எனக்கு துறை செயலாளராக இருந்துள்ளார். அவர் கைவண்ணம் எல்லாம் எனக்கு தெரியும். அவர் எழுதி தருவதை இவர் (முதல்வர் ) படிப்பார். திட்டத்தை துவக்கி வைத்த முதல்வருக்கு புதிய எவர்சில்வர் பிளேட். புதிய ஸ்பூன் அனைத்தும் அளித்தார்கள்.

சாப்பாடு போட்டவுடன் அதனை முழுமையாக சாப்பிட வேண்டும் அல்லவா. இரண்டு வாய் தான் எடுத்து வைத்திருப்பார். அதற்குள் அந்த தட்டிலேயே கையை கழுவி விட்டார். முதலமைச்சர் ஆரம்பித்த திட்டத்தையே முதலமைச்சரே அவமானப்படுத்துகின்ற நிலை உள்ளது.

விவசாயிகள் கஷ்டப்பட்டு அந்த பொருளை உற்பத்தி செய்கிறார்கள். அந்த தட்டிலேயே கை கழுவியது என்பது ஊடகங்களில் பரவியுள்ளது. ஒரு திட்டத்தை கொண்டு வந்து பெயர் வைக்கும் பணியைத்தான் செய்து வருகிறார்களே தவிர, எந்த ஒரு ஆக்கப்பூர்வமான பணியையும் செய்யவில்லை.

தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி என்ன ஆனது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் என்ன ஆனது. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் என்ன ஆனது. அரசு ஊழியர்கள் மாநாடு போட்டார்கள். எந்த அறிவிப்பும் இல்லை. அவர்கள் புறக்கணித்து விட்டு சென்று விட்டார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் முடித்து விடுவோம் என்றார்கள். அந்த சூட்சமம் எங்களுக்குத்தான் தெரியும் என்றார்கள். மசோதாவை போட்டு 180 நாட்கள் ஆகி விட்டது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வாங்க இந்த அரசுக்கு வக்கில்லை. துப்பில்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.