தற்போதைய செய்திகள்

கூட்டுறவு வங்கிகளின் வைப்புத்தொகை ரூ.58,663 கோடியாக அதிகரிப்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

வேலூர்

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.26 ஆயிரத்து 245.17 கோடியாக இருந்த வைப்புத் தொகை இன்றைய தேதியில் ரூ.58 ஆயிரத்து 663.81 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும், முதலமைச்சர், தமிழகத்தை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக எடுத்து மாநிலத்திற்குள் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், முதல்கட்டமாக, மாநிலம் முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 மும்,

அதனைத் தொடர்ந்து, முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் சில பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2ம் கட்டமாக தலா ரூ.1000 வழங்கினார். மேலும், ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2020 வரையிலான ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றை விலையில்லாமல் வழங்கினார்.

ஊரடங்கு காலத்திலும், தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல தொழில்துறையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழக கூட்டுறவுத்துறை அம்மா அவர்களின் ஆட்சியில் தான் புதுப்பொலிவு பெற்றுள்ளது. தொடர்ந்து முதலமைச்சரின் அறிவுரைப்படி பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழக அளவில், 2011 முதல் 31.07.2020 வரை 96 லட்சத்து, 58 ஆயிரத்து 641 நபர்களுக்கு ரூ.52,700.28 கோடியும், நடப்பாண்டில் 31.07.2020 வரை 1,97,607நபர்களுக்கு ரூ.1,557.98 கோடியும் வட்டியில்லா கே.சி.சி. கடன் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மண்டலத்தில் 2011 முதல் 31.07.2020 வரை 6,63,661 நபர்களுக்கு ரூ.3,280.79 கோடி பயிர் கடனும், நடப்பாண்டில் 31.07.2020 வரை 19,753 நபர்களுக்கு ரூ.126.50 கோடி வட்டியில்லா கே.சி.சி. கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் பயிர்காப்பீடு இழப்பீடாக 31.07.2020 வரை 41,82,757 விவசாயிகளுக்கு, ரூ.8,199.85 கோடியும், வேலூர் மண்டலத்தில், 50,226 நபர்களுக்கு ரூ.54.12 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கடனாக, தமிழகம் முழுவதும் 2011 முதல் 30.06.2020 வரை 63,876 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.263.37 கோடியும், வேலூர் மண்டலத்தில், 9,150 நபர்களுக்கு ரூ.27.92 கோடியும், நகைக்கடனாக, தமிழகம் முழுவதும், 6,25,97,821 நபர்களுக்கு ரூ.2,43,946.55 கோடியும், நடப்பாண்டில் 15.07.2020 வரை 12,22,306 நபர்களுக்கு ரூ.6,568.03 கோடியும், வேலூர் மண்டலத்தில், 2011 முதல் 31.07.2020 வரை 23,01,985 நபர்களுக்கு ரூ. 7,438.43 கோடியும், சிறுவணிக கடனாக 15,96,632 நபர்களுக்கு ரூ2,023.27 கோடியும், நடப்பாண்டில் 24.07.2020 வரை 44,169 நபர்களுக்கு ரூ.91.15 கோடியும், வேலூர் மண்டலத்தில், 42,914 நபர்களுக்கு ரூ.56.12 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சிறுவணிக கடன் 10.09.2019 முதல் ரூ.50,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 31.3.2011 அன்று ரூ.26,245.17 கோடியாக இருந்த வைப்புத்தொகை தற்போது அம்மா அவர்கள் ஆட்சியில், 30.06.2020 அன்று ரூ.58,663.81 கோடியாக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 31.07.2020 வரை 6.36 லட்சம் ரூபே பற்று / விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மண்டலத்தில் 31.07. 2020 வரை 14,188 ரூபே பற்று அட்டைகள் மற்றும் 11,663 ரூபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 5,853 சங்கங்கள் ரூ.189.51 கோடி மதிப்பில் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 721 சங்கங்கள் ரூ.87.10 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதில், வேலூர் மண்டலத்தில், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 17 கிளைகள் ரூ.54.33 இலட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. மாநில அளவில், ரூ.116.83 கோடி மதிப்பில் 458 கட்டடங்களும், வேலூர் மண்டலத்தில், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 2 கிளைகள் ரூ.270 லட்சம் மதிப்பில் கட்டடங்களும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதோடு, மாநில அளவில், ரூ.16.45 கோடி மதிப்பில் 132 மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளும், வேலூர் மண்டலத்தில், வேலூர் மாவட்டத்தில் 5 கிளைகளும் துவக்கப்பட்டுள்ளன.

ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், 20ரூ தள்ளுபடி விலையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் அம்மா மருந்தகம் மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மாநிலம் முழுவதும், ரூ.1012.31 கோடி அளவிற்கும், வேலூர் மாவட்டத்தில் ரூ. 38.43 கோடி அளவிற்கும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 31.07.2020 வரை 57,315 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள், ரூ.169.87 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதும், இயங்கி வந்த நடமாடும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 29.03.2020 முதல் 11.08.2020 வரை 6,055.464 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.16.19 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ஊரடங்கு காலத்தில் ரூ.500 மதிப்புடைய, 10 லட்சம் எண்ணிக்கையிலான மளிகை தொகுப்பு பைகள், ரூ.50 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 2011 முதல் 30.06.2020 வரை 676 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 1,759 பகுதிநேர கடைகளும் என மொத்தம் 2,435 புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன, இதில் வேலூர் மண்டலத்தில், 12 முழுநேர கடைகள், 63 பகுதிநேர கடைகள் என மொத்தம் 75 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 1,229 முழுநேர நியாயவிலைக் கடைகளுக்கும், 741 பகுதிநேர கடைகளுக்கும் என மொத்தம் 1,970 கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இதில் வேலூர் மண்டலத்தில், 21 முழுநேர கடைகள், 34 பகுதிநேர கடைகள் என மொத்தம் 55 கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 5 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் 300 வகையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் திறக்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு மாநில அளவில் 680 கடைகளும், வேலூர் மாவட்டத்தில் 21 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில், 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை உடனடியாக துவங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்நகரும் நியாயவிலைக் கடைகள், விரைவாக துவங்கப்பட உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 109 கடைகளும் விரைவில் துவங்கப்படும்.

கொரோனா காலத்தில் பணியில் ஈடுபட்டுள்ள நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி அரசு உத்தரவிட்டு, விற்பனையாளருக்கு ரூ.2500, கட்டுநருக்கு ரூ.2000 என வழங்கப்படுகிறது. இதனால், 21,517 விற்பனையாளர்கள் மற்றும் 3,777 கட்டுநர்கள் என மொத்தம் 25,294 பேர் பயன் பெறுவர். இதற்கென ரூ.6.13 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இதில் வேலூர் மண்டலத்தில், 1,043 விற்பனையாளர்கள் 146 கட்டுநர்கள் பயன்பெறுவர்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.