சிறப்பு செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக7.5 விழுக்காடு வழங்குவதை சட்டமாக பிறப்பிக்க அரசு நடவடிக்கை – முதலமைச்சர் உறுதி

சென்னை

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவர் ஆகும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அம்மாவின் அரசு முடிவு செய்து, அதையே வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரை வருமாறு:-

“நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, நாம் அந்நியருக்கு எதிராக நடத்திய சுதந்திரப் போரில், ஒன்றிணைந்து போராடி எப்படி வெற்றி பெற்றோமோ, அதுபோல் அம்மாவின் அரசு, கொரோனா தொற்று நோய்க்கு எதிராக, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் போராடி வெல்லும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கும் விதமாக, குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, அவை அனைத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அம்மாவின் அரசு ‘நீட் தேர்வை’ நடத்தக் கூடாது என்று கொள்கை அளவில் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வினால், தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்து விட்டது என்பதை தெளிவாக ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்யும் விதமாகஅரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவர் ஆகும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அம்மாவின் அரசு முடிவு செய்து, அதையே வரலாற்று சிறப்பு மிக்க சட்டமாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.