தற்போதைய செய்திகள்

அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தலைமையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 32வது கூட்டம்

சென்னை

அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தலைமையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 32 வது கூட்டம் நடைபெற்றது

சென்னை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய கூட்ட அரங்கில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தலைமையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 32வது கூட்டம் நடைபெற்றது. பிற மாவட்டங்களை சேர்ந்த வாரிய உறுப்பினர்கள் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவுதல் காரணமாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் சிறப்பு தொகுப்பு ரூ.100.66 கோடி செலவினத்தில் வழங்கப்பட்டதற்கும்,கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் தலா ரூ.1,000- வீதம் இரண்டு தவணைகளில் நிவாரண நிதியாக பதிவு செய்து தகுதியுடைய கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.246.43 கோடி வங்கிகள் மூலம் நேரடியாக வழங்கப்பட்டதற்கும் வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப் பட்டது.

மேலும் கட்டுமானத் தொழிலாளர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய சுய பாதுகாப்பு சாதனங்கள் 1 லட்சம் எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளதற்கும் வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் இணைய வழியில் பதிவினை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டமைக்கும் வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. 16.05.2011 முதல் 31.07.2020 வரை 10,26,936 கட்டுமானத் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு மொத்தம் 14.4 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ. 652 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தொழிலாளர் ஆணையர் நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் யாஸ்மின் பேகம் வாரிய பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.