தற்போதைய செய்திகள்

பெண் உதவியாளரை தரக்குறைவாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது

ஊரடங்கு விதிகளை மீறி சுற்றியதை கண்டித்ததால் ஆத்திரம்

சென்னை

ஊரடங்கு விதிகளை மீறியதை கண்டித்ததால் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் தமிழகம் முழுவதும் காவல்துறையினரை மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு அராஜக செயல்களில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காவல்துறையினர் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் முழுஊரடங்கு விதிமுறைகளை மீறியதை கண்டித்ததால் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றிய விபரம் வருமாறு:-

முழு ஊரடங்கையொட்டி சென்னை மண்ணடி பாரதி கலைக்கல்லூரி அருகே காவல்துறை பெண் உதவியாளர் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அந்த பகுதியை சுற்றி அடிக்கடி வலம் வந்துள்ளார். இதை பெண் காவல் உதவியாளர் கவனித்து விட்டார்.

அவர் உடனே ஆட்டோ ஓட்டுநரை மடக்கி நிறுத்தியதோடு, முழு ஊரடங்கு நேரத்தில் ஒரே இடத்தில் பலமுறை ஊர் சுற்றி வருகிறீர்களே என்று கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் என்னை மடக்கி கேள்வி கேட்கிறாயா, எனக்கு அமைச்சர் சேகர்பாபுவை நன்றாக தெரியும். நான் சாபமிட்டேன் என்றால் நீ நாசமாக போய் விடுவாய் என்று வாய்க்கு வந்தபடி பெண் காவல் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக தாக்கி பேசினார்.

ஒரு கட்டத்தில் மேலும் ஒருபடி அதிகமாகவே சென்ற அந்த நபர் செல்போனை எடுத்து அமைச்சர் சேகர்பாபுவுக்கு போன் போட்டு தருகிறேன். நீ பேசுகிறாயா, இந்தா லைனில் தான் இருக்கிறார் பேசு என்றெல்லாம் வரம்பு மீறி ஒருமையில் பேசினார். இந்த காட்சியை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிரச் செய்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இதற்கிடையில் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி தன்னை தரக்குறைவாக பேசி மிரட்டிய நபர் குறித்து காவல்துறை மேலதிகாரியிடம் புகார் செய்தார் பெண் காவல் உதவியாளர். பினர் அவரே தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து இடையூறு செய்தமைக்காக வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தார்.

இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் எங்கு பார்த்தாலும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வது, அவர்களை மிரட்டுவது போன்ற அராஜக செயல்களில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் காவல்துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.