தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்-காவல் நிலையத்தில் புகார்

விழுப்புரம்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம். கடந்த 7-ந்தேதி விழுப்புரம் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் சசிகலாவுக்கும், கழகத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று தெரிவித்தார். இதையடுத்து கடந்த இரு தினங்களாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் நான் சசிகலாவை பற்றி கருத்து தெரிவித்து தொலைக்காட்சியில் பேட்டி அளித்த நாள் முதல் இன்று வரை 500-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள், ஆபாசமாகவும் எனது குடும்பத்தை கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷெரீப் ஆகியோர் உடனிருந்தனர்.