சிறப்பு செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் நன்றி

சென்னை, ஜூன் 10-

இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜூன் 21-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில், மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்குதல், 80 கோடி மக்கள் பயனடையும் வண்ணம் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி பண்டிகை வரை நீட்டித்தல் போன்ற தங்களின் அறிவிப்புகளுக்கு என்னுடைய மகிழ்ச்சியையும், நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தடுப்பூசி கொள்முதல் செயல்முறையில் மத்திய அரசு மேம்பட்ட பங்கினை செலுத்துவது, தடுப்பூசி போதுமான அளவு கிடைப்பதற்கும், குறைந்த நேரத்தில் அதிகபட்ச தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கவும் வழிவகை செய்யும் என்று நான் நம்புகிறேன். மாநிலங்கள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு இந்த முடிவு திருப்தி அளிக்கும்.

கூடிய விரைவில் கொரோனா இல்லாத நாடாக இந்தியா விளங்க எடுத்திருக்கும் இன்றியமையாத நடவடிக்கை இது. இந்த முடிவு, மக்களுக்கு தடுப்பூசி விரைந்து செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, தடுப்பூசியை பெறுவதில் பிரச்சினைகளை சந்தித்து வரும் தமிழ்நாட்டிற்கு இந்த ஏற்பாடு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

இதேபோன்று, கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள வறுமை நிலையை கட்டுப்படுத்தும் வகையில், இலவச உணவுப் பொருட்களை வரும் தீபாவளி வரை நீட்டித்து இருப்பது ஓர் உந்துதல் நடவடிக்கை மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசுக்கு இது பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.