தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களை போல் மக்களுக்கும் பட்டை நாமம் சாத்துவார் ஸ்டாலின்-சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை

அரசு ஊழியர்களை போல் மக்களுக்கும் பட்டை நாமம் சாத்துவார் ஸ்டாலின் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று கூறிய பேரறிஞர் அண்ணாவின் புகழை எடுத்துக்கூறும் வகையில், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.55 லட்சம் கி.மீ தூரம் கிராமப்புற மற்றும் ஊரக வளர்ச்சி சாலைகள் உள்ளன. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மட்டும் 21,085 கோடி ரூபாய் மதிப்பில், 92,887 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊரக சாலைகளை அமைக்கப்பட்டன. தற்போது சாலையில் எல்லாம் மிகவும் பழுதடைந்து உள்ளன.

மதுரை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் மாநகராட்சி , 3 நகராட்சி, 9 பேரூராட்சி, 420 கிராம பஞ்சாயத்து, 655 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஏறத்தாழ 3710 கிலோ மீட்டர் சதுர அடி கொண்ட மதுரையில் 30 லட்சம் பேர் வசிக்கின்றனர். மதுரை மாநகராட்சி மட்டும் 1253 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு குடியிருப்பு சாலைகள் உள்ளன.

இப்போது நெடுஞ்சாலை துறையில் நடப்பாண்டில் 18,218 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் சாலை பணிகளுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறவில்லை. அதேபோல் ஊரக கிராமப்புற சாலைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதையும் தெரியப்படுத்தவில்லை.

புரட்சித்தலைவர் சத்துணவு திட்டத்தை தொடங்கி மகத்தான சாதனை படைத்தார். அம்மா ஆட்சி காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் சிறப்பாக செய்யப்பட்டது. தற்போது முதலமைச்சர் காலை சிற்றுண்டியை தொடங்கியுள்ளார். இதன் பயன் செயல் வடிவில் தான் தெரியும்.

முப்பெரும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் முல்லைப்பெரியாறு, 58 கால்வாய் குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அறிவிப்பு வெளியிடுவாரா என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அரசு ஊழியர்களுக்கு அரசு பட்டை நாமம் சாத்தியது போல் முப்பெரும் விழாவில் திட்டங்கள் அறிவிப்பாரா இல்லை மக்களுக்கு மட்டும் பட்டை நாமம் சாத்துவாரா என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.