கன்னியாகுமரி

குமரி பால்குளம் பகுதி மக்களுக்கு `கொரோனா’ நிவாரணம் மறுப்பு-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரத்திடம் புகார்

கன்னியாகுமரி, ஜூன் 10-

குமரி பால்குளம் பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரணம் மறுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் 125 பேருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது அவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆற்றங்கரை, குளக்கரை போன்ற நீர்நிலை பகுதிகளில் வாழ்ந்து வந்த ஏழை, எளிய மக்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் நாகர்கோவில் பாறைக்காமடத்தெரு, சபரி அணை மற்றும் சக்தி நகரை சேர்ந்த நாங்கள் பால்குடம் குடிசை வாரிய குடியிருப்பில் வாழ்ந்து வருகிறோம். மொத்தம் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

இங்கு குடிதண்ணீர் வசதி இல்லை. இப்பகுதி ஆழ்துளை கிணற்றின் தண்ணீரில் சமைத்த சாப்பாடு மஞ்சள் நிறமாக மாறி விடுகிறது. இப்பகுதியில் நியாயவிலை கடை இல்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க நாகர்கோவிலில் உள்ள ஊட்டுவாழ்மடம் நியாயவிலை கடைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் நியாயவிலை கடை அமைத்து தர வேண்டும்.

மேலும் சுகாதார வசதி, தெரு விளக்கு வசதி, சுடுகாடு வசதி போன்ற அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும். மேலும் இப்பகுதியில் கொரோனா காலத்தில் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இந்த நிலை தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் உறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அழகேசன், அஞ்சுகிராம் பேரூர் கழக செயலாளர் ராஜபாண்டி, கிளை கழக செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஞானஜெயந்தி மற்றும் மணிகண்டன், பரமசிவன், ராசையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.