தற்போதைய செய்திகள்

அதிகம் பேர் தமிழக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சிவகங்கை

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமான நபர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றியும் உணவுகள் குறித்தும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.அரசு மருத்துவர்களுக்கு கொரோனா சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் கூறினார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாத காலங்களில் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் என 15,000 நபர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டு தேவையான மருத்துவ பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட அதிகமான நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2115 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை இந்த மாவட்டத்தில் 42 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 90 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 234 கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி தாயும்சேயும் பாதுகாத்த பெருமை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேரும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவர்கள் மீனா முகமதுகான், மருத்துவ அதிகாரிகள், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.