தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு

கோவை, ஜூன் 10-

தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் கழக நிர்வாகிகளின் மக்கள் நல பணிகளுக்கு இடையூறாகவும், சட்ட விரோதமாகவும் செயல்படும் போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு அளித்துள்ளார்.

கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் சூழலில் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ளும்போது கோவை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு வழிகளில் இடையூறாக இருக்கிறார்கள். தொகுதிகளில் மக்கள் நல பணியாற்றும் கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு தொடுப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 5-ந்தேதி தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் ஏற்பாடு செய்த கிருமிநாசினி தெளிக்கும் பணியை எந்தவித புகார் மற்றும் முகாந்திரம் இல்லாமல் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுநாள் வரை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையோ மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கிருமிநாசினி தெளிக்க கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் எவ்வித தடை உத்தரவும் இல்லாத போதும் பேரூர் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசலு அறிவுறுத்தலின்படி ஆலந்துறை காவல் ஆய்வாளர் பாஸ்கர், தொண்டாமுத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் தொண்டாமுத்தூர் காவல்துறை அதிகாரிகள் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை சட்டத்திற்கு புறம்பான வகையில் தடுத்துள்ளனர்.

அதுகுறித்து பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பேரூர் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசலு எனது சரக எல்லைக்குள் கழகத்தினர் எவ்விதமான மக்கள் நலப்பணியில் செய்ய விட மாட்டேன் என்று பகிரங்க மிரட்டல் விடுக்கிறார்.

மேலும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்கரை பேரூராட்சியின் கழக கிளை செயலாளர் ஞானமூர்த்தி என்பவர் கடந்த 4-ந்ம் தேதி முகநூல் பக்கத்தில் பொதுவாக தவறு மேல் தவறு செய்பவர்களுக்கு கடவுள் தண்டனை மேல் தண்டனை தருவார் என தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் மீது பொய் வழக்குப் போட்டு சட்ட விரோதமாக காவலில் வைத்து இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வழக்கறிஞர்கள் மேற்படி காவல் ஆய்வாளர் ராஜ்குமாரிடம் கேட்டபோது பேரூர் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசலு உத்தரவின்படி செயல்படுகிறேன் என்று மிரட்டுகிறார். இதையடுத்து வழக்கறிஞர்கள் தங்களின் சொந்த பிணையில் மூர்த்தியை அழைத்து வந்தனர்.

மேலும் புகார் குறித்து எவ்வித தகவலும் தராமல் ஞானமூர்த்தியின் கைபேசியை கொடுக்காமல் “நாங்கள் அழைக்கும் போது நீ காவல் நிலையம் வர வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும்.

மேலும் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரிசிபாளையம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமில் தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் டோக்கன்களை தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டும் வழங்கினார்.

இதனால் அந்தப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதோடு ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ முகநூலில் பகிர்ந்த அரிசிபாளையம் ஊராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த மதுசூதனன் என்பவரின் வீட்டிற்கு பேரூர் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசலு உத்தரவின்பேரில் சென்ற மதுக்கரை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ராஜ்குமார் “பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன்” என்று மிரட்டுகிறார்.

இந்திய குடிமகன் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிடுவது, அதனை பகிர்வது அவருடைய அடிப்படை உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டது என்ற தீர்ப்புகள் கூறியுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், சரவணம்பட்டி, பீளமேடு, போத்தனூர், மதுக்கரை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது திமுகவினரின் வற்புறுத்தலின் பேரில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து மிரட்டி வருகின்றனர். இதுபோன்ற செயல்படும் காவல்துறையின் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்று காலத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் தி.மு.க.வினரின் தூண்டுதலின்பேரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகம் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கழக உறுப்பினர்களின் மக்கள் நலப்பணிக்கு இடையூறாகவும் சட்ட விரோதமாகவும் செயல்படும் காவல்துறையின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.