வேலூர்

கழக நிர்வாகிகள் மீது தி.மு.க.வினர் பொய் வழக்கு

வேலூர் எஸ்.பி.யிடம் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகார்

வேலூர், ஜூன் 10-

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கழக நிர்வாகிகள் மீது தி.மு.க.வினர் பொய் வழக்கு தொடுத்து வருவதாக வேலூர் எஸ்.பி.யிடம் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகார் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக பல தரப்பினர் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் வேலூர் மாநகர் மாவட்ட கழக சார்பில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தனது சொந்த செலவில் காட்பாடி, வேலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர்
காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகளை தடுக்க முயற்சிக்கின்றனர்.

திமுகவினர் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி பக்கம் வராத நிலையில். கழகத்தினர் கொரோனா நிவாரண பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர்
வேலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தூண்டுதலின் பெயரில் கழக நிர்வாகிகள் மீது பொய் புகார்களை காவல்நிலையத்தில் தி.மு.கவினர் அளித்துள்ளனர். கழக இளைஞர் அணி மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் மீது தவறான புகார்கள் காவல்நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கழக நிர்வாகிகளுடன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஆர்.கே.அப்புவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய்ப் புகார் அளித்து வருகின்றனர்.

வேலூரில் எந்தப் பகுதியில் கழக வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்ததோ அந்த பகுதியில் உள்ள கழக நிர்வாகிகளுக்கு திமுகவினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். திமுகவினர் தரும் பொய் புகாரின் அடிப்படையில் கழக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கூடாது. உண்மைத் தன்மையை அறிந்த பிறகே அவர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தெரிவித்துள்ளார்.