சிறப்பு செய்திகள்

கட்டுமானப் பொருட்களின் விலை கடும் உயர்வு-ஏழைகளுக்கு சலுகை விலையில் வழங்க முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 10-

கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வீடுகளை கட்டியும், புதுப்பித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு அரசின் சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை வழங்க முதலமைச்சருக்கு. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவின் தாக்கம் கொடிகட்டி பறக்கின்ற நிலையில் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை தொடர்ந்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கட்டுமான பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு தமிழ்நாட்டில் உயர்ந்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ேபால் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உணர்ந்து வருவதாகவும், ஊரடங்குக்கு முன் 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டை தற்போது 500 முதல் 520 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன்.

இதேபோல் 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி விலை தற்போது 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்ப டுவதாகவும், 23,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 3000 செங்கல் தற்போது 27,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும்,

58,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் கம்பி தற்போது 72,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 3800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது 5200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ஊரடங்கு நடைமுறையில் உள்ளதன் காரணமாக பெரிய கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ள நிலையில் கட்டுமான பொருட்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. ஆனாலும் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது.

ஒருவேளை ஊரடங்கு முடிந்த பிறகு கட்டுமானப் பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்டுமானப் பொருட்கள் பதுக்கப்பட்டு அதன் காரணமாக செயற்கையான விலையேற்றம் உருவாகி இருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இதன் காரணமாக கடன் வாங்கி சிறிய அளவில் புதிதாக வீடுகளை கட்டிக் கொண்டிருக்கின்ற வீடுகளை புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வீடுகளை பழுது பார்த்துக் கொண்டிருக்கின்ற ஏழை, எளிய கிராமப்புற மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சிமெண்ட் சிலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அம்மா சிமெண்ட் திட்டம் என்னும் திட்டத்தை செயல்படுத்தி சலுகை விலையில் அதாவது ஒரு மூட்டை 190 ரூபாய் என்ற விலையில் ஏழை, எளிய மக்கள் சிமெண்ட் மூட்டைகளை பெற்றுக் கொள்ள வரிவகை செய்தார் என்பதை இந்த தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி கட்டுமானப் பொருட்களின் அபரிமிதமான விலையேற்றத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதை போக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமானப் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.