சிறப்பு செய்திகள்

கோவின் இணையதளத்தில் தமிழ் சேர்ப்பு – பிரதமருக்கு, எதிர்க்கட்சி தலைவர் நன்றி

சென்னை, ஜூன் 10-

கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களின் வசதிக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் கோவின் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள பக்கத்தில் தடுப்பூசி செலுத்த விரும்புவோர் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

மத்திய அரசின் இந்த கோவின் இணையதளத்தில் இதுவரை 11 மொழிகள் பயன்பாட்டில் இருந்தன. தடுப்பூசி முன்பதிவுக்காக பயன்படுத்தப்படும் இந்த இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் கோவின் இணையதளத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர்த்து 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பிரதமர் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த நிலையில் கோவின் இணையதளத்தில் 12-வது மொழியாக தமிழ் மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தனது கோரிக்கையை ஏற்று கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்த்து உத்தரவிட்ட பிரதமர் நரேந்திரமோடிக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா துயர் துடைக்க நாட்டில் உள்ள 75 சதவீத மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்கியதற்கும், நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமைக்கும், கோவின் செயலியில் தமிழ் மொழியை பயன்பாட்டு மொழியாக்கம் செய்தமைக்கும் பிரதமர் மோடிக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.