விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு நிதியாக 11,215 பேருக்கு ரூ.11.84 கோடி வழங்கப்பட்டுள்ளது – ஆட்சியர் தகவல்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு நிதியாக 11,215 பயனாளிகளுக்கு ரூ.11.84 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் 8 தொழில் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மூலதன நிதி மானியத்திற்கான காசோலைகளையும், 4 உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு முதல் தவணை நிதியாக ரூ.28 லட்சம் மூலதன நிதி மானியத்திற்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் நேற்று வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது;-

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் காரியாபட்டி ஆகிய நான்கு வட்டாரங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவிட்-19 ஊரடங்கினால் பாதிக்கபட்டுள்ள கிராமப்புற சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள், மாற்றுத்திறனாளி, நலிவுற்ற தொழில் முனைவோர்கள், விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியவை உற்பத்தி,

விலைவீழ்ச்சி மற்றும் சந்தைப்படுத்துதலில் பின்னடைவு ஆகிய காரணங்களால் பெரும் இழப்பை சந்தித்து உள்ளதை அறிந்த முதலமைச்சர் மீண்டும் தொழில் துவங்கிடவும் மற்றும் நிதி இழப்பினை சரிசெய்யவும் கோவிட்-19 சிறப்பு நிதி உதவி தொகுப்பினை அறிவித்து மேற்கண்ட பிரிவினர்களை சார்ந்தவர்களுக்கு மூலதன நிதியாக வழங்கிட 30 மாவட்டங்களுக்கு ரூ.363.35 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையாக வெளியிட்டார்.

இந்த நிதியில் நமது விருதுநகர் மாவட்டதிற்கு ரூ.12.96 கோடி ஒதுக்கீடு வரப்பெற்று அதிலிருந்து ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒன்றியங்களைச் சார்ந்த தனிநபர் தொழில் முனைவோர் 2313 நபர்களுக்கு ரூ.7.36 கோடியும், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்ற தொழில் முனைவோர் 1347 நபர்களுக்கு ரூ.2.3 கோடியும், புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் 67 நபர்களுக்கு ரூ.67 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 74 உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.1.11 கோடி மூலதன நிதி மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று 8 தொழில் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மூலதன நிதி மானியமாகவும், 4 உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு தலா 10 லட்சம் வீதம் மூலதன நிதி மானியமாகவும் அனுமதித்து முதல் தவணை நிதியாக தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.28 லட்சம் 7469 உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நமது மாவட்டத்தில் இதுவரை ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலமாக கொரோனா சிறப்பு நிதியாக 11,215 பயனாளிகளுக்கு ரூ.11.84 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) குருநாதன், மாவட்ட செயல் அலுவலர் (தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்) பிரேம்குமார், இணை இயக்குநர்(வேளாண்மை) உத்தண்டராமன், துணை பொது மேலாளர்(நபார்டு வங்கி) இராஜ சுந்தரேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.