கரூர்

முதலமைச்சர் உத்தரவின்படி கரூர் மாயனூரில் உள்ள புதிய கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் திறப்பு

கரூர்

முதலமைச்சர் உத்தரவின்படி கரூர் மாயனூரில் உள்ள புதிய கட்டளை மேட்டு கால்வாயில் இருந்து நடப்பாண்டு பாசனத்திற்கான நீரை மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன், கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கல்வாய்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக 18.08.2020 முதல் 31.12.2020 வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க நேற்று புதிய கட்டளை மேட்டு கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. புதிய கட்டளை மேட்டு கால்வாய், மாயனூர் கட்டளை கதவணையிலிருந்து தொடங்கி கரூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 134 கி.மீ இவ்வாய்க்கால் மாயனூரில் தொடங்கி கரூர் மாவட்டத்தில் 60 கி.மீ தூரமும், திருச்சி மாவட்டத்தில் 53 கி.மீ தூரமும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 கி.மீ தூரமும் சென்று இறுதியில் தஞ்சாவூர் மாவட்டம், திருமலை சமுத்திரம் கிராமத்தில் அருகில் உள்ள பிடாரி ஏரியில் முடிவடைகிறது. இவ்வாய்க்காலில் 28 பிரிவு வாய்க்கால்கள் மற்றும் 22 வழங்கு வாய்க்கால்கள் ஆகியவற்றின் மூலம் பாசன நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இவ்வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் பாசனம் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் இந்த வாய்க்கால் கடந்து செல்லக்கூடிய 60 கி.மீ தூரமும் பாசன பரப்பு இல்லா வாய்க்காலாகவே அமைந்துள்ளது. இவ்வாய்க்கால் மூலம் திருச்சி மாவட்டத்தில் 16,164 ஏக்கர் விளை நிலங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 4,491 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுகின்றன.

விவசாயிகளுக்கு குடிமராமத்து என்ற உன்னதமான திட்டத்தை வழங்கி, குடிமராமத்து நாயகனாக மக்கள் மனதில் வீற்றிருக்கும் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திறக்கப்பட்டுள்ள இந்த கால்வாயின் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் நீரை விவசாயப் பெருமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காவிரி ஆற்றுபாதுகாப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சந்தரமதி, உதவிபொறியாளர்கள் கார்த்திக், ஸ்ரீதர், கூட்டுறவு சங்க பிரதிநிதி பொரணி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.