தற்போதைய செய்திகள்

சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி – புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு

புதுச்சேரி,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க புதுச்சேரி கிழக்கு மாநில கழகம் முடிவு செய்துள்ளது.

கழக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் புதுச்சேரியில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற்றது. மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில கழக இணை செயலாளர் அன்பானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை என்றும், புதுச்சேரி கிழக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதி வாரியாக உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை, தட்டு வண்டி, தள்ளுவண்டி, சலவைப்பெட்டி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.

மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் படி நீட் தேர்வு சட்டம் கொண்டு வரப்பட்டது, நீட் தேர்வு சம்பந்தமான வழக்கில், தேர்வு மிக அவசியம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியது. மத்திய காங்கிரஸ், கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து, நீட் தேர்வை கொண்டு வந்த தி.மு.க.வே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சியில் அமர்ந்ததும் தற்பொழுது ரத்து செய்ய முடியாது என தெரிந்து, தங்களது இயலாமையை அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் மூடி மறைக்க முயற்சித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் உண்மை நிலையை மூடி மறைத்து மாணவர்களின் உணர்ச்சிகளை தவறாக தூண்டிவிட்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கும் தி.மு.க.வின் வஞ்சக செயலை புதுச்சேரி கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் கழக ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய உள் ஒதுக்கீடு போன்று புதுச்சோயிலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உரிய உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இக்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக துணைத்தலைவருமான ராஜாராமன், மாநில கழக இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, கணேசன், மாநில கழக பொருளாளர் ரவி, மாநில கழக துணை செயலாளர்கள் அன்பழகன், மூர்த்தி, கருணாநிதி, உமா என்ற கோவிந்தம்மாள், சேரன், கிருஷ்ணமூர்த்தி, மணவாளன், குமுதன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாணவரணி செயலாளர் பிரதீப், மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.