தற்போதைய செய்திகள்

ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது – பொது மக்களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் நன்றி

சென்னை 

ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும் இதற்கு ஒத்துழைத்த பொதுமக்களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று ஒரு சமயத்தில் ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவில் காணப்பட்டது.

ராயபுரம் மண்டலத்தில் ஏப்ரல் மாதம் 191 பேருக்கு என்று இருந்த தொற்று, ஜூன் மாதம் 5414 பேருக்கு என்ற அளவில் பரவியது. அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, தற்போது தொற்றானது 402 பேருக்கு என்று வெகுவாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக ஜூன் மாதம் 1678 என்ற அளவிற்குப் பரவி, அரசு நடவடிக்கைகளின் காரணமாக ஆகஸ்ட் மாதம் வெறும் 82 ஆகக் குறைந்துள்ளது.

ராயபுரம் மண்டலத்திலும், சட்டமன்றத் தொகுதியிலும் வைரஸ் தொற்று வெகுவாக குறைந்து வருவதற்கு, நீங்கள் அளித்த ஒத்துழைப்பும்தான் காரணம். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வைரஸ் தொற்று இனி நம்மோடுதான் இருக்கும் என்று சொல்லப்பட்டுவரும் நிலையில், இந்த தொற்றுக்கான தடுப்பூசி வரும் வரை, இந்த வைரஸ் நம்மைத் தொற்றாமல் இருக்க, அரசு கூறும் ஆலோசனைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல் ஆகியவற்றை நாம் தொடர்ந்து கவனமாகப் பின்பற்றுவோம். ராயபுரம் மண்டலத்திலும், ராயபுரம் தொகுதியிலும் கொரோனா தொற்றே இல்லை என்ற நிலையை விரைவில் உருவாக்குவோம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.