தற்போதைய செய்திகள்

2021-ல் கழகமே 3-வது முறை ஆட்சியை அமைக்கும் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு

திருவண்ணாமலை

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் 2021ல் கழகமே மூன்றாவது முறை ஆட்சியை அமைக்கும் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் போளூர் பேரூராட்சி பகுதியிலுள்ள 18-வது வார்டு மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தேர்வு மற்றும் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி, சார்பில் கழக உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் போளூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ஜெயசுதா லட்சுமிகாந்தன் அனைவரையும் வரவேற்றார். போளூர் நகர கழக செயலாளர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது;-

தமிழக முதலமைச்சரும். கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி. துணை முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழகமே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் இன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் போளூர் நகர ஒன்றிய பகுதிகளில் மாவட்ட அம்மா பேரவை மற்றும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கழகத்தில் ஆர்வத்துடன் இணைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் நல் ஆசையோடும், இளைஞர்களின் எழுச்சியோடும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளையும் வரும் சட்டமன்ற தேர்தலில் வென்றெடுத்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் கரங்களில் ஒப்படைக்கப் கழக நிர்வாகிகள் சபதம் ஏற்க வேண்டும். 2021ல் அம்மாவின் நல்லாசியுடன் மூன்றாவது முறையாக அம்மாவின் அரசு தமிழகத்தில் அமைய கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

முன்னதாக கலசப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.