ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்?அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சேலம், ஜன. 12-
ஆன்லைன் சூதாட்டத்தை இன்னும் தடை செய்யாதது ஏன்? என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது?
பதில் :- கழக ஆட்சியின்போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தோம், அதனை எதிர்த்து ஆன்லைன் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த வழக்கை சிறப்பாக வாதாடாததால் ரத்து ஆகி விட்டது. ஆனால் உடனே சட்டத்துறை அமைச்சர் ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறினார்.
கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகிவிட்டது. இவர்களால் இதுவரை தடை ஆணை வாங்க முடியவில்லை, ஆனால் ராஜேந்திரபாலாஜியை பிடிப்பதற்கு மட்டும் 8 தனிப்படை அமைக்கிறார்கள், சமீபத்தில் கூட ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். தி.மு.க. அரசு திறமையாக வாதாடாததால் வழக்கு தள்ளுபடி ஆகியுள்ளது.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.