தற்போதைய செய்திகள்

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களின் மனதை குளிர செய்துள்ளனர் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

மதுரை

இந்த நான்காண்டுகளில் தென் மாவட்டங்களுக்கு திட்டங்களை வாரி வழங்கி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களின் மனதை குளிர செய்துள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்தோடு கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-

தமிழகத்தில் அம்மாவின் வழியில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார் . அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார். உலகமே மிரண்டு போயிருக்கும் இந்த தொற்று நோயிலிருந்து தமிழக மக்களை காத்திட பல்வேறு நோய் தடுப்பு பணிகளில் முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். இதுவரை 6,650 கோடி ரூபாய் வரை தமிழக அரசின் சார்பில் இந்த தொற்றுநோய் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டு ஆண்டுகளில் ஆறுமுறை உணவு தானிய உற்பத்தியில் 100 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து தமிழகம் சாதனை படைத்துள்ளது. அந்த சாதனையை முதலமைச்சரும் ,துணை முதலமைச்சரும் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். தற்போது கூட மேட்டூர் அணையிலிருந்து உரிய பருவ காலத்தில் தண்ணீர் திறந்து விட்டதால் டெல்டா பகுதியில் 4 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நான்கு மாத காலத்தில் வல்லரசு நாடுகளே பொருளாதார சூழ்நிலையில் சுருண்டு கிடக்கும் பொழுது இந்த நான்கு மாதத்தில் அமெரிக்கா ,ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, தைவான் போன்ற 17 நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு 30,664 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்து இதன் மூலம் 67,218 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

இதுமட்டுமல்லாது முதலமைச்சர் தொடர்ந்து 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார். இதில் ஏறத்தாழ 72 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. முதலமைச்சரின் இதுபோன்ற திட்டத்தால் இன்றைக்கு தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக இருந்தபோதும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.03 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தனிநபர் வருமானம் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த நான்காண்டுகளில் தென்மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழங்கியுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடியில் மிகப்பெரிய தொழிற்சாலையை வர உள்ளது.

அதேபோல் தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இணைக்கும் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி உருவாக்கப் பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலும் கால்நடை கல்லூரி வர உள்ளது . மதுரையில் ரூ. ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் திட்டம் நடைபெற்று வருகிறது. இப்படி தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றைக்கு ஒட்டுமொத்தத்தில் கழகத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அலை உருவாகியுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து மதுரை மேற்கு மாவட்டத்தில் கழகத்திற்கு இமாலய வெற்றி கிடைத்தது. கழகத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழந்தது என்ற வரலாற்றை இளைஞர்களை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், ராஜா, பிச்சை ராஜன், மாவட்ட அணி நிர்வாகிகள் காசிமாயன், தமிழழகன், தமிழ்ச்செல்வம், சரவணன், ஜஹாங்கீர், சதீஷ் சண்முகம், லட்சுமி, வேலுச்சாமி, போத்திராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்