தற்போதைய செய்திகள்

மதுரை 2ம் தலைநகரமாக உருவாகினால் தென் மாவட்டம் தொழில் வளர்ச்சி பெருகும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

மதுரை 2ம் தலைநகரமாக உருவாகினால் தென் மாவட்டம் தொழில் வளர்ச்சி பெருகும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

அம்மாவின் ஆசியுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிவாரண தொகுப்புகளை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான சொல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், முன்னாள் துணை மேயர் திரவியம் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலை ராஜா , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம் ,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கிருஷ்ணன் மற்றும் முனிச்சாலை சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த தொற்று நோய் கண்டு உலகமே மிரண்டு போய் உள்ளது ஆனால் நமது தமிழகத்தில் முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு இந்த நோயை தமிழகத்தில் கட்டுப்படுத்தப் படுத்தியுள்ளார். அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார். ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டும் வகையில் நோய் தடுப்பு பணியில் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என மத்திய அரசு பாராட்டி வருகிறது.

மதுரையை இரண்டாவது தலை நகரமாக மாற்ற வேண்டுமென்று புரட்சித்தலைவர் விரும்பினார். ஆனால் அவர் நல்ல நோக்கத்துடன் சொன்ன விருப்பத்திற்கு கருணாநிதி முட்டுக்கட்டை போட்டார். தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரை தான் அதேபோல கலையுலகத்திற்கும் மதுரை தான் நகரம்.

மதுரையில் தான் அரசியல் கட்சிகள் பல தோன்றின. அரசியல் நிகழ்வு மட்டுமல்லாது. வேறு எந்த நிகழ்வாக இருந்தாலும் மதுரையில் தொடங்குவது வழக்கமாக இருக்கிறது. மதுரையில் புரட்சித்தலைவர் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். அதன்பின் தமிழ் சங்கம் அமைத்தார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மாவும் மதுரையில் தான் முக்கிய முடிவுகளை எடுப்பார்.

மதுரையில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த அம்மா முன்னுரிமை தந்தார். மதுரையை வளர்ச்சி நகரமாகவும் தொழில் நகரமாகவும் மாற்ற வேண்டும் என்று அம்மா விரும்பினார். அதன் காரணமாகத்தான் மதுரையில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடியில் பல திட்டங்கள் இப்போது நடைபெற்று வருகிறது. மதுரை மாநகருக்கு 60 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் முல்லைப்பெரியாறில் இருந்து மதுரைக்கு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்படுகிறது.

வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் அல்ல. அது மக்களின் விருப்பம். மக்களின் விருப்பத்தை முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் நிறைவேற்றித் தருவார்கள். அதன் மூலம் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருகும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்