தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டது- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

மதுரை
எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் கே.கே.நகர் அருகே மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபால் தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அன்னதான நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர். ஆனால் நாங்கள் கடவுளாக வணங்கும் எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டிய பிரதமருக்கு எனது நன்றிகள்.
கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான கட்டமைப்பை உருவாக்கியது கழக அரசு தான். இதை பார்த்து மத்திய அரசே பாராட்டியுள்ளது. அது மட்டுமல்லாது முதன்முதலில் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவார்.
ஆனால் கடந்த 8 மாதமாக தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது. எந்த திட்டத்தையும் செய்யாமல் அம்மா அரசு போட்ட திட்டங்களை வர்ணம் பூசி அதை தாங்கள் செய்ததாக தம்பட்டம் அடித்து வருகின்றனர். இது மக்களுக்கு நன்றாக தெரியும். இது விடியல் அரசு அல்ல, விளம்பர அரசு ஆகும்.
கடந்த அம்மா ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு உயர்மட்ட மேம்பாலங்கள், தடுப்பணைகள், கட்டிடங்கள் சாலை வசதிகள், குடிநீர் திட்டங்களை நிறைவேற்றினோம். சமீபத்தில் பெய்த மழையினால் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
ஏற்கனவே அம்மாவின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்களை தி.மு.க. அரசு தற்போது ரத்து செய்து விட்டது. ஆனால் மீண்டும் ஒப்பந்த பணிகளை கோராமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.
இதை கண்டித்து கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மதுரையில் நடத்தினோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. இதன் மூலம் தி.மு.க.வுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்கிய கழக அரசிடம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு தி.மு.க.வினர் சொன்னார்கள். இந்தாண்டு தி.மு.க. அரசு தரும் தரமற்ற பொங்கல் பரிசை மக்கள் குப்பையில் வீசி செல்கின்றனர்.
தற்போது 10 ஆயிரம் ரூபாய் தருவார்கள் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏமாற்றம் தந்த தி.மு.க.வுக்கு விரைவில் வரும் மதுரை மாநகராட்சி தேர்தலில் மக்கள் தோல்வியை வழங்குவார்கள்.
இவ்வாறு மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.