விடியா தி.மு.க. ஆட்சியில் கூடுதல் மதுக்கடைகள் திறப்பு – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல்
விடியா தி.மு.க. ஆட்சியில் இல்லாத இடங்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு கழக ஆட்சியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ.2 கோடி ஒதுக்கினார். விநாயகர் தேர் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு மீதமுள்ள நான்கு தேர்களுக்கு பணிகள் செய்வதற்குள் ஆட்சி மாற்றம் காரணமாக தேர் வேலைகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனைப் பயன்படுத்தி ஏதோ தங்கள் ஆட்சியில் செய்வது போல் தி.மு.க.வினர் தவறாக செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
டாஸ்மாக் கடை பார்களை மாவட்டத்திற்கு ஒருவருக்கு என டெண்டர் கொடுத்தது குறித்து தி.மு.க.வினரே எங்களிடம் புகார் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். கழக ஆட்சியில் கூட தி.மு.க.வினர் பார் நடத்தினர்.
தற்போது தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினரே பார் நடத்த முடியாத சூழல் இருக்கிறது, மதுக்கடைகளை குறைப்போம் என்றவர்கள் இதுவரை மதுக்கடைகள் இல்லாத இடங்களில் கூட திறந்து வருகின்றனர். பள்ளிபாளையம் நகராட்சியில் கூட இதுவரை டாஸ்மாக் கடையே இல்லாத நிலையில் தற்போது இரண்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
அம்மாவின் அரசு வீடுகளுக்கு வழங்கிய 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு இதுவரை மக்கள் யாரும் பில் கட்டாத நிலையில் தற்போதைய தி.மு.க அரசு கட்டணம் வசூலிக்கும் வகையில் மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வரியை விதித்துள்ளனர். இதனால் இது வரை பில் கட்டாதவர்கள் கூட முப்பதிலிருந்து ஐம்பது ரூபாய் ஜி.எஸ்.டி கட்டணமாக செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.