தற்போதைய செய்திகள்

கட்சி பாகுபாடின்றி பணிகள் நிறைவேற்றப்படும்

ஒன்றியக்குழு தலைவர்களிடம் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உறுதி

திருவண்ணாமலை,
கட்சி பாகுபாடின்றி மக்கள் பணிகள் நிறைவேற்றப்படும் என்ற ஒன்றியக்குழு தலைவர்களிடம், முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி மேற்கு ஆரணி ஒன்றிய கழக அலுவலகத்தில் ஆரணி ஊராட்சி ஒன்றியம், ஊரக உள்ளாட்சித்துறையின் சார்பாக நடைபெறும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, சவீதா, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆ.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு ஆரணி ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் சாலை வசதி, குடிநீர் பிரச்சனை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைத்து தருதல், பக்க கால்வாய் அமைத்தல், சுடகாட்டு பாதை அமைத்து தருதல், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

நான் ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு எம்.எல்.ஏ. ஆகையால் தான் மேற்கு ஆரணி ஒன்றியத்தின் சார்பில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்களை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறினேன். அதன்பேரில் தான் தற்போது கூட்டம் நடைபெறுகிறது.

ஆரணி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை நான் கடந்த முறை அமைச்சராக இருந்தபோது கட்சி பாகுபாடில்லாமல் அனைத்து பகுதிக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளைசெய்தேன். மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளேன்.ஆகையால் தொகுதி முழுவதும் கிராமங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்களிடம் தான் மக்கள் கூறுவார்கள். எனவே தான் உங்கள் பகுதி தேவைகளை மனுவாக தாருங்கள். அப்பணிகளுக்குரிய திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகள் செய்யப்படும்.

மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து தேவையான பணிகள் செய்யப்படும். கூட்டத்தில் பங்கேற்காத தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளின் குறைகளை தெரியபடுத்தினால் ஆய்வு செய்து அப்பணிகள் செய்யப்படும். கட்சி பாகுபாடின்றி மக்கள் பணி செய்யப்படும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.