தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மா கட்டித்தந்த மீன் ஏலக்கூடத்தை தங்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் – அமைச்சர் க.பாண்டியராஜனிடம் மீனவர்கள் கோரிக்கை

சென்னை

சென்னை காசிமேட்டில் மீன் ஏலம் விடுவதற்காக புரட்சித்தலைவி அம்மா கட்டித்தந்த விற்பனை மையத்தை மீண்டும் தங்களது வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அமைச்சர் க.பாண்டியராஜனிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை காசிமேட்டில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கி, மருத்துவ சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனர்.

அப்போது புரட்சித்தலைவி அம்மா கட்டி தந்த மீன் ஏலம் விடும் இடத்தை தற்போது மீன் வளத்துறை இயக்ககம் கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் மீன் ஏலம் விடுவதற்கு வேறொரு இடம் வழங்கியிருப்பதாகவும் அந்த இடம் தங்களுக்கு சரியானதாக இல்லை என்றும் மீன் ஏலம் விடுவதற்காக கட்டித்தரப்பட்ட இடத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கழக மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெகன், அமைச்சர் க.பாண்டியராஜனிடம் மனுவொன்றை வழங்கினார்.

மேலும் மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களை கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கொரோனா காலத்தில் துயருறும் மீனவர்கள் வாங்கிய கடன்களை வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் அமைச்சரிடம் மனு வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் க.பாண்டியராஜனிடம் காசிமேடு மீன்மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் க.பாண்டியராஜன், கோயம்பேடும் காசிமேடும் ஜனநெருக்கடியில் சரிசமமான இடங்களே காசிமேட்டில் இப்போது மொத்த விலை கடைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது, கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அங்கும் சில்லரை விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, சில்லரை விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டால் இரண்டு இடத்திலும் 1 லட்சம் அளவுக்கு மக்கள் கூடும் வாய்ப்பிருக்கிறது, பெங்களுரு நகரத்தில் தற்போது 20 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது,

மீனவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. ஆனால் நோய்த்தொற்று ஏற்பட்டால் மீள்வது கடினம், வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் செய்யாத யோகா இல்லை. மூச்சு பயிற்சி இல்லை. அவரே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மற்றவர்கள் அவதிப்பட கூடாது என்பதற்காக உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் ஐந்து நாட்களில் சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள் என்று தன்னை உதாரணமாக வைத்து ஆலோசனை கூறுகிறார், முதலமைச்சரை பொறுத்தவரை பெங்களுரு நிலை சென்னைக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

மேலும் சென்னை காசிமேடு மீன் ஏலக்கூடம் பகுதியில் அமைச்சர் க.பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்து மீனவர்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். மீனவர்களின் மனுக்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இதில் ஆர்.எஸ்.ஜெனார்தனம், ஏ.கணேசன், ஆர்.வி.அருண்பிரசாத், சந்தனசிவா, ஜெ.எம்.நரசிம்மன், பி.ஜெகன், குமுதா பெருமாள், தனபால் நகர் சிவகுமார், ஷரிகிருஷ்ணன், க.முத்துமாணிக்கம், வி.எஸ். புருஷோத்தமன், கே.பி.விஜி, எல்.எஸ்.மகேஷ்குமார், பி.மோகன், கே.பி.கர்ணன், டாஸ்மாக் கணேசன், டி.பிரபா, எஸ்.மோகன் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம், சிறு வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.