தற்போதைய செய்திகள் மற்றவை

பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிடுவதா? விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்

சென்னை,

பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றை திரித்து தவறாக செய்தி வெளியிட்டுள்ள விடியா தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு 16.1.2022 அன்று வெளியிட்ட, செய்தி வெளியீடு எண் 111-ல், மறைந்த முதலமைச்சர் `பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரை பற்றி உண்மைக்கு மாறான பல தகவல்களை, அரசின் சார்பாக வெளியிட்டுள்ளதற்கு என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் கட்சி வரலாறும், தமிழக அரசியல் வரலாறும் தெரியாத ஒருவரை முதலமைச்சராக பெற்றிருப்பது தமிழகத்தின் தலையெழுத்து என்றே கருதுகிறேன். தன்னை தி.மு.க.வின் தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆக்கிய கட்சியின் பொருளாளரான புரட்சித் தலைவரையே, கணக்கு கேட்டார் என்பதற்காக கட்சியை விட்டே நீக்கி, ஏறிய ஏணியை எட்டி உதைத்த, செய் நன்றி கொன்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாரிசுகள் பொய்யையும், புனை சுருட்டையும் மூலதனமாக்கி அரசியல் நடத்துவது விந்தையானதல்ல.

விடியா தி.மு.க. அரசின் செய்திக்குறிப்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி வாயிலாக தனக்கென்று தனியிடம் பெற்றவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் சினிமாவில் நுழையவே முடியாத நிலையில், திரைத்துறையே வேண்டாம் என்று கோவையில் இருந்து தனது சொந்த ஊரான திருக்குவளைக்கு ஓடியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பது வரலாறு.

இதை அறிந்த புரட்சித்தலைவர், தனது தமையனார் எம்.ஜி.சக்ரபாணியை விட்டு கருணாநிதிக்கு கடிதம் எழுதி, அவரை மீண்டும் கோவைக்கு வரவழைத்து, பட்சிராஜா ஸ்டுடியோவில் மருதநாட்டு இளவரசி படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்..

மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வருவதற்கு முன்னரே, என்தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போன்ற பல வெற்றி படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் கோலோச்சியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. அனைத்திற்கும் மேலாக, கருணாநிதி எழுதியதாக சொல்லப்படும் வசனங்களை, எங்களது புரட்சித் தலைவரும், அவரது தம்பி நடிகர் திலகமும், தங்களுடைய படங்களில் உச்சரித்ததால் தான் கருணாநிதி எழுத்துகளுக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு.

திரையுலகை சேர்ந்த பலருக்கும் தெரிந்த இந்த உண்மைகள், புரட்சித்தலைவரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய இன்றைய முதலமைச்சரின் உறவினர் சொர்ணத்துக்கும் நன்றாக தெரியும். ஆனால், அவர் இன்று நம்மிடம் இல்லை என்பதுதான் இயற்கையின் சதி. இந்த உண்மைகளை மறைத்து வரலாற்றை திருத்தி எழுதிய கோமான்களை என்னவென்று சொல்வது?

அடுத்து, 1986-87 காலக்கட்டத்தில், தமிழகத்தில் மருத்துவத் துறைக்கென்று தனியாக பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க புரட்சித் தலைவைரின் அரசு முடிவெடுத்தது. இதற்கான முன் முயற்சிகளை அன்றைய அமைச்சர்கள்
சு.முத்துசாமி (இன்றைய தி.மு.க. அமைச்சர்) மற்றும் டாக்டர் ஹண்டே ஆகியோர் மேற்கொண்டனர்.

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த இன்பசாகரன், முன்னின்று மத்திய அரசின் ஒப்புதலை பெற்றார். 1987, டிசம்பர் 25-ல் பல்கலைக்கழக திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில், அன்றைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பல்கலைக்கழகத்தை திறப்பது என்று முடிவானது.

மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு “டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்’’ என்று பெயர் வைக்க அமைச்சர்கள் முடிவு செய்து, அன்றைய முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள். உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை வைக்கக்கூடாது என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதை மறுத்தார். ஆனால், முத்துசாமியும், மற்ற அமைச்சர்களும், புரட்சித் தலைவரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்கள்.

புரட்சித்தலைவரின் எண்ணப்படியே, திறப்பு விழாவிற்கு முதல் நாளான டிசம்பர் 24-ம் நாள் புரட்சித் தலைவர் நம்மை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். அதன்பின், 1989-ல் சந்தர்ப்பவசத்தால் ஆட்சிக்கு வந்த கருணாநிதி வேறு வழியின்றி, தமிழ் நாடு என்று ஒரு வார்த்தையை சேர்த்து “தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்’’ என்று, அதே குடியரசுத் தலைவரை வைத்து திறப்பு விழா நடத்தினார்.

தற்போது தன் அருகே வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் சு. முத்துசாமியிடமும், மூத்த அரசியல் தலைவர் டாக்டர் ஹண்டேவிடமும், இது சம்பந்தமான முழு விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இனியாவது, இந்த விடியா தி.மு.க. அரசு, தமிழக அரசின் சார்பாக வெளியிடப்படும் அறிக்கைகளில், வரலாற்றை திரிக்காமல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரை பற்றிய வரலாற்றை திரித்து, தவறாக அரசு செய்தி அறிக்கை வெளியிட்ட விடியா தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.