சிறப்பு செய்திகள் மற்றவை

பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க நடவடிக்கை-முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை

பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேளாண் தொழிலுக்கு அடுத்தபடியாக தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாகவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை தரும் துறையாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாயை ஈட்டி தரும் துறையாகவும் விளங்கும் ஜவுளித் தொழில் கடும் நூல் விலை உயர்வு காரணமாக மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை தொழிலுக்கு புகழ் பெற்ற மாவட்டமான திருப்பூரில் கிட்டத்தட்ட 15,000 உற்பத்தி ஆலைகள் இயங்கி வருவதாகவும், கிட்டத்தட்ட ஆறு லட்சம் நபர்கள் இந்த தொழிலை நம்பி உள்ளதாகவும், 2020-2021-ம் ஆண்டு 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றும், தற்போது ஏறிகொண்டே வரும் நூல் விலை உயர்வு காரணமாக இந்த தொழிலே முடங்கும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

ஒவ்வொரு மாதமும் பஞ்சு விலைக்கு ஏற்றவாறு நூல் விலையை ஆலைகள் நிர்ணயம் செய்வதாகவும், இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஓராண்டில் 150 ரூபாய் வரை விலை ஏறியுள்ளதாகவும், பஞ்சு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கடந்த மூன்று மாதங்களில் 200 லட்சம் பேல் பருத்தி சந்தைக்கு வந்திருக்க வேண்டும் என்றும்,

ஆனால் 125 லட்சம் பேல் தான் சந்தைக்கு வந்திருக்கிறது என்றும், விலை உயரும் என்ற நோக்கில் அதிக அளவிலான பருத்தி சந்தைக்கு வரவில்லை என்றும், உள்ளூரில் பஞ்சுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது வெளிநாடுகளில் இருந்து முன்பு இறக்குமதி செய்ததாகவும், இதன் காரணமாக உள்நாட்டிலும் விலை உயராமல் இருந்ததாகவும்,

கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி அளவு குறைந்து விட்டதாகவும், இதன் காரணமாக உள்ளூரில் விலை உயர்கிறது என்றும்,

அதே சமயத்தில் நம்மிடமிருந்து பஞ்சினைக் கொள்முதல் செய்யும் சீனா, வங்க தேசம் போன்ற நாடுகள் அதன்மூலம் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்டுவதாகவும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் உள்ளிட்ட இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

2020-ம் ஆண்டில் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கேண்டி பருத்தி பஞ்சு அந்த ஆண்டு இறுதியில் 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், 2021-ம் ஆண்டு இறுதியில் 64 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், தற்போது 73 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் 80 ஆயிரம் ரூபாயை எட்டக்கூடும் என்றும் தகவல்கள் வருகின்றன.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இரண்டே ஆண்டுகளில் பஞ்சின் விலை இரட்டிப்பாகிவிட்டது. இறக்குமதி வரி விதிக்கப்படுவதற்கு முன்பு சர்வதேச விலையை விட இந்திய விலை குறைவாக இருந்ததாகவும், பஞ்சுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்ட பின்னர், சர்வதேச விலையைவிட இந்திய விலை அதிகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, பருத்தி நூலை மூலப்பொருளாக கொண்டு செயல்படும் ஆயத்த ஆடைகள், அவற்றுக்கான துணி, வீட்டு பயன்பாட்டிற்கான ஜவுளி ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜவுளித் தொழிலை காப்பாற்ற பஞ்சுக்கான இறக்குமதி வரியை நீக்குவதும், ஏற்றுமதியை தடை செய்வதும்தான் ஒரே வழி என்றும்,

இதனை வலியுறுத்தி 2 நாட்கள் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்துவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்றாலும், ஜவுளித் தொழில் சந்திக்கும் பிரச்சினைகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி இறக்குமதி வரியை நீக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்ட

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஜவுளி தொழிலில் நிலவும் பிரச்வினைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று, தேவையான அழுத்தத்தை அளித்து, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான வரியை நீக்கவும், ஏற்றுமதியை தடை செய்யவும் நடவடிக்கை எடுத்து ஜவுளித் தொழிலை காப்பாற்ற வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ெவளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.