தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட வேண்டும் – தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர்

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அரசு வழிகாட்டுதலின்படி கொண்டாடுவது குறித்து இந்து மத அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளதாக நினைப்பது தவறாகும். உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து கூட்டமாக வழிபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறிய கோவில்களில் சமூக இடைவெளியுடன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதால், தனிநபர் வீட்டிற்கு முன்புறம் மற்றும் பட்டா இடங்களிலும், பொதுப்பார்வையிலும் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கிடையாது. வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை வைப்பதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இந்துமத அமைப்புகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுமாறும், மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், வருவாய்க் கோட்ட அலுவலர்கள் வேலுமணி(தஞ்சாவூர்), விஜயன்(கும்பகோணம்), மணிவேலன்(பொ)(பட்டுக்கோட்டை) மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.